தேசிய அளவிலான டென்னிக்காய்ட் போட்டி: புதுச்சேரி வீரர்கள் பதக்கம் வென்று சாதனை

பாகூர்: ஒடிசா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான டென்னிக்காய்ட் போட்டியில், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று புதுச்சேரி வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அகில இந்திய டென்னிக்காய்ட் பெடரேஷன் ஆதரவுடன், ஒடிசா மாநில டென்னிக்காய்ட் சங்கம் சார்பில், 48வது தேசிய அளவிலான சீனியர் டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த மாதம் 25ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை, ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்றது. இதில், புதுச்சேரி மாநிலம் சார்பாக சீனியர் அணியில் கோவிந்தராஜன், தேவராஜ், சாம்ராஜ், யுவபிரியன், சிவபாலன் மற்றும் அஜய் ஈஸ்வரன் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிபதக்கம் வென்றனர்.

பழனியம்மா, கமலி, பவித்ரா, ராகவி, ஆர்த்தி மற்றும் கனிமொழி ஆகியோர் கொண்ட மகளிர் அணி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கோவிந்தராஜன் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கமும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் கமலி மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கமும் வென்றனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் பழனியம்மா, பவித்ரா ஜோடி முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.

பதக்கங்களுடன் புதுச்சேரி திரும்பிய வீரர்களுக்கு பாகூரில் பாராட்டு விழா நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., புதுச்சேரி மாநில அமெச்சூர் டென்னிக்காய்ட் சங்க தலைவர் ராமு, பயிற்சியாளர்கள் தண்டபாணி, வரதராசு, மேலாளர்கள் பிரகாஷ், அருள்பிரகாசம், அணி ஒருங்கிணைபாளர் வழக்கறிஞர் தினேஷ்குமார் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.

Advertisement