மானாமதுரை முனீஸ்வரர் கோவில் ஆலமரம் சாய்ந்ததால் வேதனை

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில், மதுரை- - ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில், தல்லாகுளம் தர்ம முனீஸ்வரர் கோவில், ஆலமரத்தின் கீழ் அமைந்துள்ளது.
சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் சேவல்களை நேர்த்திக்கடனாக விடுவதால், 200 ஆண்டு பழமையான இந்த கோவில் ஆலமரத்தில் எப்போதும் ஏராளமான சேவல்கள் வசிக்கின்றன.
எட்டு ஆண்டுகளுக்கு முன் நான்கு வழிச்சாலை அமைக்க பணி நடைபெற்ற போது, இக்கோவில் ஆலமரத்தை அகற்ற அதிகாரிகள் முயன்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக இப்பணியில் ஈடுபட்ட இரு அதிகாரிகள் இறந்ததோடு, மரங்களை அகற்ற வந்த இயந்திரங்களும் பழுதடைந்ததால் ஆலமரத்தையும், கோவிலையும் அகற்றாமல் இரு புறங்களிலும் நான்கு வழிச்சாலையை அமைத்து தற்போது போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இக்கோவிலில் வரும் 6ம் தேதி வருஷாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில், நேற்று அதிகாலை, ஆலமரம் நான்கு வழிச்சாலையில் சாய்ந்தது. இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் உடனடியாக மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
எனினும், மரத்தில் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்ட சேவல்களுக்கும், கோவிலை ஒட்டி படுத்திருந்தோருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.