காதல் மனைவியை மீட்டு தர எஸ்.பி.,யிடம் தொழிலாளி புகார்

விழுப்புரம் : திண்டிவனம் அருகே உள்ள ஆசூர் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் நாகராஜ், 26; கூலி தொழிலாளி. இவர், நேற்று மாலை விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில்;

நானும் எங்கள் கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.

இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால், எங்கள் காதலுக்கு மகாலட்சுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் கடந்த 2ம் தேதி இரவு, வீட்டை விட்டு வெளியேறி சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். தகவலறிந்த மகாலட்சுமியின் உறவினர்கள், எங்களை தேடி சென்னைக்கு வந்தனர். சமாதானம் பேசி, இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறி, தீவனூர் கிராமத்திற்கு நேற்று காலை அழைத்து வந்தனர். அப்போது, என்னை தகாத வார்த்தையால் திட்டி, எனது மனைவியை வலுக்கட்டாயமாக பிரித்து இழுத்துச்சென்று விட்டனர். மகாலட்சுமியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. உரிய நடவடிக்கை எடுத்து, மகாலட்சுமியை மீட்டுத்தர வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இதனால், ஆணவக்கொலை நடைபெற வாய்ப்புள்ளது என, அவர் போலீசில் தெரிவித்தார். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.

Advertisement