கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.677.17 கோடி லாபம் * அதிக லாபத்தில் விழுப்புரம் முதலிடம்

சிவகங்கை:தமிழகத்தில் மாநில தலைமை கூட்டுறவு மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் கடந்த நிதி ஆண்டில் (2024--2025) ரூ.55,404.97 கோடி டெபாசிட் பெற்றது. கடனாக ரூ.89,828.42 கோடி வழங்கியதில் நிகர லாபமாக ரூ.677.17 கோடி ஈட்டியுள்ளன. அதிக லாபம் ஈட்டிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் விழுப்புரம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழக அளவில் மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் இருந்து விடுவிக்கப்படும் தொகை மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன், நகை அடமான கடன் வழங்கப்படுகிறது. அந்தந்த மத்திய கூட்டுறவு வங்கிகள் டெபாசிட் பெறுவதன் மூலம் வங்கிக்கான நிதியை சீர்படுத்துகின்றன.

கடந்த நிதி ஆண்டில் (2024--2025) மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் சேர்ந்து ரூ.55,404.97 கோடி வரை டெபாசிட்டாக பெற்றுள்ளன. பயிர், நகை கடனாக ரூ.89,828. 42 கோடி வரை வழங்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக மாநில தலைமை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ரூ.ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 233 கோடியே 39 லட்சம் வரை வர்த்தகம் செய்துள்ளது. இதன் மூலம் மாநில அளவில் தலைமை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ரூ.677.17 கோடி வரை நிகர லாபம் பெற்றுள்ளன.

* அதிக லாப பட்டியலில் விழுப்புரம்:

மாநில தலைமை கூட்டுறவு வங்கி மட்டுமே கடந்த நிதி ஆண்டில் ரூ.12,220.63 கோடி வரை டெபாசிட் பெற்றும், ரூ.29,547.26 கோடி வரை பயிர், நகை கடன் வழங்கியும் உள்ளது. இந்த வங்கி ரூ.41,767.89 கோடி வரை வர்த்தகம் செய்து, நிகர லாபம் மட்டுமே ரூ.241.61 கோடி ஈட்டியுள்ளது. மாநில அளவில் அதிக லாபம் ஈட்டிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பட்டியலில் ரூ.56.43 கோடி பெற்று விழுப்புரம் முதலிடம், ரூ.50.35 கோடி பெற்று சென்னை இரண்டாமிடம், ரூ.37.82 கோடி பெற்று ராமநாதபுரம் மூன்றாமிடம், ரூ.34.18 கோடி பெற்று கும்பகோணம் நான்காம் இடத்தில் உள்ளன.

* குறைந்த லாப பட்டியலில் நீலகிரி:

மாநில அளவில் குறைந்த லாபம் ஈட்டிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் பட்டியலில் ரூ.4.70 கோடி பெற்று நீலகிரி முதலிடம், ரூ.5.79 கோடி பெற்று விருதுநகர், திருநெல்வேலி இரண்டாமிடம், ரூ.7.92 கோடி பெற்று புதுக்கோட்டை மூன்றாமிடம், ரூ.7.87 கோடி பெற்று துாத்துக்குடி நான்காம் இடம், ரூ.7.54 கோடி பெற்று சிவகங்கை ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement