வெப்பம் அதிகரிப்பால் நீர்நிலைகளை தேடி படையெடுக்கும் வன விலங்குகள்

மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்ததால், குடிநீருக்காக நீர்நிலைகளை தேடி வனவிலங்குகள் படையெடுத்து வருகின்றன.

இம்மாவட்டத்தில் கோடை துவங்கியது முதல் வெப்பம் அதிகரித்தது. தவிர மாவட்டத்தில் ஊதா நிற கதிர்வீச்சு 10 புள்ளிகள் வரை அதிகரித்ததால் வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தது. அதனால் வெயிலில் வேலை செய்வோர் உள்பட பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியதுடன் காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை கவனமாக இருக்குமாறு வலியுறுத்தி வருகிறது.

வெப்பத்தால் வனம், காடு, புல் வெளிகள் கருகி, நீர்நிலைகளும் வறண்டு விட்டன. அதனால் தீவனம், குடிநீர் தேடி யானை, காட்டுமாடு உள்பட வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி வருகின்றன.

ஏற்கனவே மூணாறு, சின்னக்கானல், ஆனயிறங்கல் உள்பட பல பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது அவை குடிநீர் தேடி மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தேடி படையெடுத்து வருகின்றன. அவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் வனம், காடு ஆகியவற்றில் தீவனங்களுக்கு ஏற்பாடு செய்து தண்ணீர் தொட்டிகளை வனத்துறையினர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement