'ஜியோ'விடமிருந்து கட்டணம் வசூலிக்க மறந்த பி.எஸ்.என்.எல்.,

10


புதுடில்லி: கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொண்ட, 'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனத்திடம் இருந்து அதற்கான கட்டணத்தை, அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., வசூலிக்கவில்லை. இதனால், அரசுக்கு 1,757 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி., அறிக்கை கூறுகிறது.



சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., எனப்படும், 'பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்' நிறுவனம், தன் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள, 'ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.


ஆனால், இதற்கான கட்டணத்தை வசூலிக்கவில்லை. இவ்வாறு, 2014 மே முதல் 2024 மார்ச் வரையிலான காலத்தில் மட்டும், கட்டணம், அபராதம் என, 1,757.56 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.


முதன்மை சேவை ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த கட்டணத்தை பி.எஸ்.என்.எல்., வசூலித்திருக்க வேண்டும்.


இதுபோல, தொலைத்தொடர்பு கட்டமைப்பு வசதிகளை அளித்தோரிடம் இருந்து, லைசென்ஸ் கட்டணத்தை பி.எஸ்.என்.எல்., கழித்துக் கொள்ளவில்லை. இந்த வகையில், அரசுக்கு, 38.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement