ரெகுலர் தாசில்தாராக வாய்ப்பே கிடைக்காதா 10 ஆண்டுகளாக பணி செய்தவர்கள் புலம்பல்
கடலுார் மாவட்டத்தில் இதோ, அதோ என ஜவ்வாக இழுத்து வந்த தாசில்தார்கள் இடமாற்றம் ஒரு வழியாக நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. மாவட்டத்தில் 25 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் பல தாசில்தார்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தும், ரெகுலர் தாசில்தாராக முடியாமல் கவலையில் உள்ளனர்.
ஆனால் ஒரு சிலர் ரெகுலர் தாசில்தார்களாகவே தொடர்ந்து 2 மற்றும் 3வது முறையாகவும் அதே போன்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
ஒரு சில பெண் தாசில்தார்கள் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் போதெல்லாம் உடனடியாக களத்தில் ஆஜராக வேண்டும் என்று ரெகுலர் தாசில்தார்கள் பணியிடம் தேவையில்லை என ஒதுங்கிக் கொள்கின்றனர்.
ரெகுலர் தாசில்தார்கள் பணியிடம் பார்க்க பலர் தகுதியானவர்கள் இருக்கும் போது, ஏற்கனவே ரெகுலர் பார்த்தவர்களுக்கு மீண்டும், மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவது ஏன் என தெரியவில்லை. ஒரு தாசில்தார்(ரெகுலர்) பணியிடம் தேவையில்லை என்று சொன்னால் மற்ற பிரிவிற்கு பணியமர்த்தலாம்.
இல்லையென்றால் அவர்களை ஒரு முறையாவது ரெகுலர் தாசில்தாராக பொறுப்பேற்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என தாசில்தார் சங்கம் வலியுறுத்துகிறது.
இதுதொடர்பாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து தங்கள் கோரிக்கையை வைப்பது, இல்லையென்றால் போராட்டத்தில் குதிப்போம் என்கின்றனர்.
ஆனால், விரும்பி கேட்கும் இடத்திற்கு வரும் தாசில்தார்கள் முறையாக பணி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அதன் காரணமாகத்தான் இந்த டிரான்ஸ்பர்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.