மைசூரு பட்டு சேலை தொழிற்சாலை ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

மைசூரு : அரசின் பட்டு சேலை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்களின் பணி காலம் முடிந்ததால், 'தாங்களே தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்' என்று கூறி, ஒப்பந்த ஊழியர்கள், தொழிற்சாலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மைசூரு நகரின் மானந்தவாடி சாலையில் அரசுக்கு சொந்தமான பட்டு சேலை தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்து உள்ளது. இங்கு பட்டுக்கூடை வேக வைத்து, அதில் இருந்து நுால் எடுத்து, தறியில் சேலையாக நெய்யும் பணியில், 800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த தொழிற்சாலை குத்தகை ஒப்பந்தம், மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. நேற்று தொழிற்சாலை முன், ஒப்பந்த ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டிருந்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த கிருஷ்ணராஜா பா.ஜ., - எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சவிடம் அவர்கள் கூறியதாவது:

தொழிற்சாலையை குத்தகைக்கு எடுத்த ஒப்பந்தம் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. புதிதாக ஒப்பந்தம் பெற்றவர், எங்களையே பணியில் தொடர அனுமதிப்பாரா அல்லது புதிதாக ஊழியர்களை நியமிப்பரா என்று தெரியவில்லை.

தொழிற்சாலைக்கு பணிக்கு வந்த எங்களை, இன்று (நேற்று) முதல் பணிக்கு வர வேண்டாம் என்று அங்குள்ள அதிகாரிகள் கூறினர். டி.நரசிபுரா, சென்னபட்டணாவில் உள்ள பட்டு தொழிற்சாலையில், ஒப்பந்தம் மாறிய போதும், அங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதுபோன்று எங்களையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தொழிற்சாலை நிர்வாகிகளுடன் விவாதித்து, எங்களை இங்கேயே தொடர்ந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கு பதிலளித்து எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சவ் கூறுகையில், ''தொழிற்சாலை அதிகாரிகளுடன் பேசி, இங்கேயே நீங்கள் வேலை செய்வது தொடர்பாக விவாதிக்கிறேன். முதல்வர் சித்ரதாமையாவை சந்தித்து, உங்கள் பிரச்னையை சரி செய்கிறேன். உங்களை பணியில் இருந்து நீக்க விடமாட்டேன்,'' என்றார்.

Advertisement