ரூ.10 ஆயிரம் லஞ்சம்; சேலத்தில் வி.ஏ.ஓ., உதவியாளர் கைது

3

சேலம்: சேலத்தில் பட்டா மாறுதல் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் செல்லப்பிள்ளைகுட்டை ஊராட்சியின் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ரவிச்சந்திரன். இவரிடம் ராஜேந்திரன் என்பவர் பட்டா மாற்றம் மற்றும் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதனை செய்து தர ரூ.10,000 லஞ்சம் தர வேண்டும் என்று வி.ஏ.ஓ., ரவிச்சந்திரன் கேட்டுள்ளார். இதனை கொடுக்க விரும்பாத ராஜேந்திரன், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொண்டு, வி.ஏ.ஓ., ரவிச்சந்திரனிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரவிச்சந்திரனை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், அவருக்கு லஞ்சம் வாங்க உதவி செய்து வந்த உதவியாளர் பெருமாளையும் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement