உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மாலில் உள்ள ஓட்டலுக்கு நோட்டீஸ் வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மாலில் இயங்கி வரும் மெக்டொனால்ட் உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

புதுச்சேரி மாலில் இயங்கும் மெக்டொனால்ட் உணவகத்தின் சிக்கன் பர்கரை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி, மயக்கம் குறித்த வீடியோ வைரலான நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, உணவகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர்.

புதுச்சேரி, தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த பர்மான். இவர் நேற்று மாலை டெலிவரி ஆப் மூலம் புதுச்சேரி- கடலுார் சாலையில் உள்ள தனியார் மாலில் இயங்கி வரும் மெக்டொனல்ட் உணவகத்தில் 4 சிக்கன் பர்கர் மற்றும் சிக்கன் நகட்ஸ் ஆர்டர் செய்துள்ளார்.

ஆர்டர் செய்த உணவை, சாப்பிட்ட அவரது குழந்தைக்கு திடீரென வாந்தி எடுத்துள்ளார். பின்னர், மீதமுள்ள பர்கரை எடுத்துப் பார்த்தபோது, அதில், வேகாத பச்சைக்கோழி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, பர்மான், உணவகத்திற்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் வேகாத சிக்கன் பர்கரரை காண்பித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென மெக்டொனல்ட் உணவகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, உணவகத்தின் நிர்வாக அதிகாரியிடம் இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியதுடன், அங்கிருந்த பர்கர் மற்றும் பதப்படுத்தப்பட்ட சிக்கன் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

மேலும், இதுகுறித்து இரண்டு நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை எனில், உணவகத்திற்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisement