அரும்பார்த்தபுரம் பைபாசில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் அதிரடி

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு இடங்களை, ஆக்கிரமிப்பாளர்களால், கபளீகரம் செய்வதை 'தினமலர்' நாளிதழ் சுட்டி காட்டியதை தொடர்ந்து நேற்று கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

புதுச்சேரி நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் மூலக்குளம் மூலம் இந்திரா சிக்னல் வரை நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் முதல் ரெட்டியார்பாளையம் ஜான்பால் நகர் வழியாக நுாறடிச்சாலை ரயில்வே மேம்பாலம் வரை புறவழி (பைபாஸ்) சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தியது.

அந்த இடத்தில் நீண்ட போராட்டத்திற்கு பின், ரூ.30 கோடி செலவில் 4.5 கி.மீ., துாரத்திற்கு 28 மீட்டர் அகலம் (91அடி)க்கு செம்மண் நிரப்பி, 22 மீட்டர் (72 அடி) அகலத்திற்கு தார் சாலை சென்டர் மீடியனுடன் அமைக்கப்பட்டது. பணிகள் முழுமை பெறாத நிலையில் தற்போது இந்த சாலை மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அரும்பார்த்தபுரம் பாலம் முதல் உழந்தை ஏரி வரை, சாலைக்கும் ரயில்வே பாதைக்கும் இடையே உள்ள அரசு புறம்போக்கு இடங்களை, அரசியல் பின்புலம் கொண்டவர்கள் மெல்ல, மெல்ல மண் கொட்டியும், வேலி அமைத்தும் கபளீகரம் செய்து வந்தனர்.

இதனை 'தினமலர்' நாளிதழ் சுட்டி காட்டி நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டு, அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றது.

அதனைத் தொடர்ந்து, கலெக்டர் குலோத்துங்கன், சப் கலெக்டர் குமரன், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குனர் செந்தில்குமார், தாசில்தார்கள் வில்லியனூர் சேகர், உழவர்கரை செந்தில்குமார், பொதுப்பணித்துறை (தேசிய நெடுஞ்சாலை பிரிவு) உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை 9:30 மணிக்கு அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையை நேரில் பார்வையிட்டு, நிலப்பதிவேடு துறை ஆவணங்களின் அடிப்படையில் அளவீடு செய்தனர். அதில், பல இடங்கள் மண் கொட்டியும், கழிகள் நட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது கண்டுபிடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

மேலும், அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் முதல் உழந்தை ஏரி வரை சாலையின் இருபுறமும் அளவீடு செய்து சுற்று வேலி அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, நில அளவீடு துறை சார்பில் விரைவில் அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை முழுவதுமாக அளவீடு செய்யப்பட உள்ளது. ஆக்கிரமிப்பை தவிர்க்க இந்த புறவழிச்சாலையை நுாறடி சாலையாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement