மாடக்குளம் கண்மாய் தடுப்புச்சுவர் முறையாக அமைக்க வழக்கு

மதுரை: மதுரை மாடக்குளம் கண்மாய்க் கரையில் சாலை பணியுடன் நடக்கும் தடுப்புச்சுவர் கட்டுமானத்தை முறையாக மேற்கொள்ள தாக்கலான வழக்கில் மனுவை பெரியாறு வைகை பாசன கோட்ட செயற்பொறியாளர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை வழக்கறிஞர் பாலமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: மாடக்குளம் கண்மாய்க் கரையில் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. விராட்டிபத்து அருகில் அமைய உள்ள பைபாஸ் சாலையுடன் இணைக்கப்படும்.

கண்மாய்க் கரை ஓரங்களில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது. அதற்கு எர்த் பீம், கான்கிரீட் துாண்கள் அமைக்கவில்லை. முறையான, முழுமையான கட்டுமானமாக இல்லை. மழைக்காலத்தில் நீர்வரத்து அதிகரித்தால் தடுப்புச்சுவர் சேதமடையும். மக்களின் வரிப்பணம் விரையமாகும்.

கரையை பலப்படுத்த முறையாக தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தி மாநகராட்சி கமிஷனர், நீர்வளத்துறை பெரியாறு வைகை பாசன கோட்ட செயற்பொறியாளருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: பெரியாறு வைகை பாசன கோட்ட செயற்பொறியாளர் 8 வாரங்களில் மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement