பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு 5வது முறையாக ஏலம் அரசியல்வாதிகள் தலையீடு தவிர்க்கப்படுமா

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்டில் கட்டப்பட்டுள்ள 34 கடைகளுக்கு 5 வது முறையாக மீண்டும் ஏலம் நடத்தப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், இந்த முறையாவது அரசியல் தலையீடுகள் இல்லாமல் முறையாக நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 கோடி செலவில் பஸ் ஸ்டாண்டில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றபோது புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது. இதில் கட்டப்பட்ட 34 கடைகளுக்கான 2021ல் ஏலம் நடத்தப்பட்டது. கடை ஒதுக்கீடில் சர்ச்சை இருப்பதாக கூறி ஏல விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட பா.ஜ., கவுன்சிலர் தனபாலன் மாநகராட்சிக் கூட்டத்தில் கோரினார். இதை தொடர்ந்து ஏலம் ரத்து செய்யப்பட்டு 2வது முறையாக ஏலம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால் ஏலம் வெளிப்படையாக நடைபெறவில்லை என கூறி 2023ல் உயர்நீதிமன்றத்தில் பா.ஜ., கவுன்சிலர் தனபாலன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 2024ல் வழங்கப்பட்ட தீர்ப்பில் பழைய ஏலத்தை ரத்து செய்து ஏலம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு பின் திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் பிப்.28ல் ஏலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் 30 பேர் தரப்பில் வரைவோலை வழங்கப்பட்டிருந்தாலும் கடன் தீர்வு தரச் சான்றிதழை 4 நபர்கள் மட்டுமே வழங்கினர். சிலருக்கு மட்டும் விதிமுறைகளை தளர்த்துவதற்கு மறுப்பு தெரிவித்து மறு தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.தொடர்ந்து மார்ச் 28 ல் ஏலம் நடைபெற்றது. அரசின் மதிப்பீடான ரூ.15ஆயிரத்துக்கும் குறைவான தொகையையே ஒப்பந்தப்புள்ளி கோரி தாக்கல் செய்தவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அரசின் மதிப்பீட்டை விட குறைவான தொகைக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் ஏலம் ரத்து செய்யப்பட்டது தற்போது மீண்டும் ஏப். 9ல் ஏலம் நடத்தப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையாவது அரசியல் தலையீடுகளை கடந்து வருவாய் கிடைக்கும் வகையில் முறையான ஏலம் நடைபெறுமா என்ற எதிபார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Advertisement