சஸ்பெண்ட் அதிகாரிகளுக்கு மீண்டும் பணி; பீஹார் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

2


புதுடில்லி: பீஹாரில், மழை வெள்ளத்தில் பாலங்கள் இடிந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன அதிகாரிகளை, பரபரப்பு தணிந்ததும் மீண்டும் பணியில் அமர்த்தியதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் -பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.


இங்கு, கடந்த ஆண்டு மே, ஜூன், ஜூலையில் மழை வெள்ளத்தின்போது, பாலங்கள் அடுத்தடுத்து இடிந்தன.

குற்றச்சாட்டு



சிவாண், சரண், மதுபானி, அராரியா, கிழக்கு சம்பரான், கிஷன்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் 10 பாலங்கள் விழுந்ததால், அரசுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.


இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி பீஹார் அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பீஹார் சாலை கட்டுமானத் துறை கூடுதல் தலைமைச் செயலர், பீஹார் மாநில பாலங்கள் கட்டுமான நிறுவனத்தின் தலைவர், ஊரக பணிகள் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஆகியோருக்கு கடந்த ஆண்டு ஜூலை 29-ல் உத்தரவிட்டது.


இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:



பீஹாரில் மழை வெள்ளத்தில் பாலங்கள் இடிந்து விழுந்ததும், உடனடியாக சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், அந்த சம்பவம் தொடர்பான பரபரப்பு அடங்கியதும், மீண்டும் அவர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முன்னுரிமை



இந்த வழக்கில் பீஹார் அரசும், அரசு அதிகாரிகளும் மிக நீண்ட பதிலை தாக்கல் செய்துள்ளனர். அரசின் பிரமாணப் பத்திரத்தில் திட்டங்கள், கொள்கைகள் பற்றிய நீளமான பட்டியல் இருக்கிறது. ஆனால், பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவங்களுக்கான காரணம் எதுவுமே குறிப்பிடப்படவில்லை.


மாநிலம் முழுதும் 10,000 பாலங்களை ஆய்வு செய்ததாக பீஹார் அரசு கூறியுள்ளது. அரசு அளித்த பதிலை ஆய்வு செய்ததை தொடர்ந்து, இந்த வழக்கு பாட்னா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது.


பீஹார் பாலங்களின் கட்டமைப்பு, பாதுகாப்பு தணிக்கை ஆகியவற்றை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளித்து, மாதாந்திர அடிப்படையில் பாட்னா உயர் நீதிமன்றம் கண்காணிக்கும்.


பீஹார் அரசு, அரசு அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களும், மனுதாரரும் மே 14-க்குள் பாட்னா உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி, அடுத்த விசாரணை தேதியை முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் தெரிவித்தனர்.

Advertisement