கடலாடி அரசு கலைக் கல்லுாரியில் பட்ட மேற்படிப்பு துவங்க கோரிக்கை ஆர்வம் காட்டாத உயர் கல்வித்துறை

கடலாடி: கடலாடி அரசு கலைக்கல்லுாரியில் பட்ட மேற்படிப்பு துவங்க கோரிக்கை விடுக்கப்பட்டும் உயர் கல்வித்துறை ஆர்வம் காட்டாத நிலை உள்ளது.

கடலாடியில் 2014ல் அரசு கலை அறிவியல் கல்லுாரி இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவக்கப்பட்டது.

2018ல் புதிய கட்டடம் கட்டப்பட்டு அவற்றில் கடலாடி அரசு கலை அறிவியல் கல்லுாரி செயல்படுகிறது. பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., பி.பி.ஏ., என ஐந்து பாடப்பிரிவுகள் உள்ள நிலையில் பி.ஏ., மற்றும் பி.காம்., படிப்பில் அதிகளவு மாணவர்கள் படிக்கின்றனர்.

இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது :

சாயல்குடி, கடலாடி, சிக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கடலாடி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் படிக்கின்றனர்.

கூடுதலாக எம்.ஏ., மற்றும் எம்.காம்., புதிய பட்ட மேற்படிப்பு பாடப்பிரிவுகளை துவக்க உயர்கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீஸ், ராணுவம் உள்ளிட்ட அரசுப் பணிகளில் அதிகளவு கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாணவர்களுக்கான உடற்பயிற்சி கூடம் மற்றும் விளையாட்டு திடல் வசதியின்றி உள்ளது. இதனால் திறமை இருந்தும் பயன்படுத்த வழியின்றி உள்ளது. இங்குள்ள கல்லுாரி முதல்வர் கடலாடியுடன் முதுகுளத்துார் அரசு கலைக் கல்லுாரியையும் சேர்த்து கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

எனவே மாணவர்களின் நலன் கருதி உயர்கல்வித்துறை அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.

Advertisement