அப்பனேந்தலில் புதிய ரேஷன் கடை திறப்பு

தினமலர் செய்தி எதிரொலி

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே அப்பனேந்தல் கிராமத்தில் 3 மாதத்திற்கு மேலாக கட்டி முடித்து திறக்கப்படாமல் இருந்த ரேஷன் கடை கட்டடம் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஐந்தே நாட்களில் கட்டடத்தை அதிகாரிகள் திறந்து வைத்தனர்.

முதுகுளத்துார் அருகே அப்பனேந்தல், நாகனேந்தல், அ.நெடுங்குளம் கிராமங்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் ரேஷன் கடை இல்லாததால் 7 கி.மீ.,ல் உள்ள தட்டான்குடியிருப்பு கிராமத்திற்கு சென்று அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வந்தனர்.

இலவச அரிசியை கூட செலவு செய்து வாங்கி வரும் அவலநிலை இருந்தது.

ரூ.7.50 லட்சத்தில் அப்பனேந்தல் கிராமத்தில் புதிய ரேஷன்கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

கட்டடம் திறக்கப்படாததால் தற்போது வரை இலவச பொருட்களுக்கு பணம் செலவு செய்து வாங்கி வரும் அவலநிலை தொடர்கிறது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக கட்டடம் திறப்பு விழா நடந்தது. கூட்டுறவு சார்பதிவாளர் பொது விநியோக திட்டம் திருலோக சந்தர் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து, முன்னாள் ஊராட்சி தலைவர் அழகம்மாள் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

ரேஷன் கடை திறந்து வைக்கப்பட்டு மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது.

மூன்று மாதத்திற்கு மேலாக திறக்கப்படாமல் இருந்த கட்டடத்தை தினமலர் நாளிதழில் செய்தி வெளியான ஐந்தாவது நாளில் அதிகாரிகள் திறந்து வைத்தனர்.

50 ஆண்டுக்கு மேல் பொதுமக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Advertisement