சிவகங்கை கோயிலில் கொடியேற்றம் 

சிவகங்கை: சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி, வழிவிடும் சிவ முருகன் கோயிலில் கொடியேற்றம், காப்பு கட்டுடன் நேற்று பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலில் வீற்றிருக்கும் சுப்பிரமணியர் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் நேற்று காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியருக்கு அபிேஷக ஆராதனை செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. பக்தர்களும் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். இரவு 8:30 மணிக்கு மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா வந்தார்.

9ம் நாளான ஏப்., 10 ம் தேதி காலை 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் எழுந்தருள்வார். அதனை தொடர்ந்து பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம், நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து நிலையை அடையும். அன்று இரவு 8:30 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சுப்பிரமணியர் எழுந்தருள்வார். ஏப்., 11 அன்று இரவு 10:00 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும். ஏப்., 12 அன்று காலை சைத்தியோபசாரம், இரவு புஷ்ப பல்லக்குடன் விழா நிறைவு பெறும்.

* சிவகங்கை காந்தி வீதியில் உள்ள வழிவிடும்சிவமுருகன் கோயிலில், நேற்று காலை 6:15 முதல் 7:15 மணிக்குள் முருகனுக்கு காப்பு கட்டி பங்குனி திருவிழா துவங்கியது. நேற்று மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏப்., 11 காலை 7:00 மணிக்கு பக்தர்கள் கவுரி விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளில் வலம் வருவர். பின்னர் வழிவிடும் சிவமுருகனுக்கு பாலபிேஷகம் நடைபெறும். தொடர்ந்து பட்டிமன்றம், ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

Advertisement