போராட்டத்தை ஒத்திவைத்த பாரதியார் பல்கலை மாணவர்கள்

கோவை; பாரதியார் பல்கலை நிர்வாகம் கால அவகாசம் கோரியுள்ளதால், ஆராய்ச்சி மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

பாரதியார் பல்கலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், பல்கலையில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதால் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் ஆராய்ச்சி மாணவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. துணைவேந்தர் இல்லாததே இதற்கு காரணம் எனவும், துணைவேந்தரை உடனடியாக நியமிக்க வலியுறுத்தி மாணவர்கள் நேற்று முன்தினம், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பல்கலை நிர்வாகம் தரப்பில் மாணவர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, 20 முதல், 30 நாட்கள் வரை அவகாசம் கோரப்பட்டுள்ளது.

அதற்குள் மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்ததால், மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.

Advertisement