பஸ் ஸ்டாப் நிழற்குடைகள் எங்கே போச்சு? வெயிலிலும், மழையிலும் பயணிகள் அவதி

கோவை; கோவையில், பல்வேறு பணிகளுக்காக அகற்றிய பஸ் ஸ்டாப் நிழற்குடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை; வெயிலிலும், மழையிலும் பயணிகள் அவதிப்படுகின்றனர். பஸ்சுக்காக வயதானவர்கள் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 375 இடங்களில், பஸ் ஸ்டாப்கள் இருந்தன. மாநகராட்சி சார்பில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தன. திருச்சி ரோட்டில் மேம்பாலம் கட்டியபோது, நிழற்குடைகள் அகற்றப்பட்டன. மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகளாகி விட்டன; நிழற்குடைகள் இன்னும் அமைக்கவே இல்லை.

இதேபோல், உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டியபோது, கரும்புக்கடை, ஆத்துப்பாலம் பகுதிகளில் இருந்த நிழற்குடைகள் எடுக்கப்பட்டன; மீண்டும் நிறுவப்படவில்லை.

அவிநாசி ரோட்டில், 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பால வேலை நடந்து வருகிறது. ஒவ்வொரு இடமாக, பயணிகள் நிழற்குடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இவ்வழித்தடத்தில் ஒவ்வொரு ஸ்டாப்பில் ஏராளமான பயணிகள் நின்று, பஸ்களில் ஏறிச் செல்கின்றனர். வெயிலும், மழையிலும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

ரோட்டோரத்தில் நிற்க வேண்டியிருப்பதால், கால்கடுக்க காத்திருக்கின்றனர்; அமர்வதற்கு வசதியின்றி முதியவர்கள் சிரமப்படுகின்றனர். அருகாமையில் உள்ள கடைகளில் ஒதுங்குகின்றனர். ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ள, ஸ்டேட் பாங்க் ரோட்டின் இருபுறமும் சில ஆண்டுகளுக்கு முன் மழை நீர் வடிகால் கட்டியபோது, கடைகளுக்கு முன்பிருந்த பயணிகள் நிழற்குடைகள் அகற்றப்பட்டன.

அப்பகுதிகளிலும் மீண்டும் அமைக்கவில்லை. ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டை மாதிரி சாலையாக மாற்றுவதற்கு அகற்றிய நிழற்குடைகளும் மீண்டும் அமைக்கப்படவில்லை.

இதேபோல், குறிச்சி, சுந்தராபுரம், போத்தனுார், சிங்காநல்லுார், ராமநாதபுரம், ஒலம்பஸ் உள்ளிட்ட பகுதிகளில் அகற்றப்பட்ட நிழற்குடைகள் மீண்டும் ஏற்படுத்தப்படவில்லை. வெயிலிலும், மழையிலும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

தற்போது, 116 இடங்களில், தனியார் பங்களிப்புடன், 12 கோடி ரூபாயில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. இந்த நிழற்குடைகளில், பயணிகளுக்கான வசதிகளை செய்து தர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement