காரியாபட்டியில் நிரந்தர பஸ் டெப்போ வருமா

காரியாபட்டி: காரியாபட்டியில் நீண்ட நாள் கோரிக்கையான நிரந்தர பஸ் டெப்போ அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

காரியாபட்டியில் 15 ஆண்டுகளுக்கு முன் பஸ் டெப்போ அமைக்கப்பட்டது. வாடகை இடத்தில் தற்போது செயல்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகள், டிரைவர், கண்டக்டர்களுக்கு போதிய வசதி, ஒய்வு அறை எதுவும் செய்ய முடியவில்லை. டீசல் போட மற்ற டெப்போக்களை நாட வேண்டியிருக்கிறது.

மழை நேரங்களில் சேரும், சகதியுமாக இருக்கிறது. பஸ்களை நிறுத்த முடியவில்லை. டெப்போவை காலி செய்யும் போக்கு இருப்பதால்இங்கு பணி செய்ய டிரைவர், கண்டக்டர்கள் மற்ற அலுவலர்கள், மெக்கானிக்குகள் யோசிக்கின்றனர். பழுதாகும் பஸ்களுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் வாங்குவதற்கு பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. உரிய நேரத்திற்கு பழுது நீக்கி, பஸ்களை இயக்குவதில் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது.

மாநிலத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்ட தற்காலிக பஸ் டெப்போக்கள் நிரந்தரமாக்கப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகிறது. காரியாபட்டியில் மட்டும் 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவிக்கப்பட்டும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிக வாடகையால் நிதி சுமை ஏற்படுகிறது.

பல்வேறு காரணங்களால் டெப்போவை காலி செய்ய ஏற்பாடுகள் நடக்கிறதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. காரியாபட்டியில் ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. சிலர் ஆக்கிரமித்து பட்டா போட்டு வருகின்றனர்.

அப்படிப்பட்ட இடங்களை கண்டறிந்து, டெப்போ அமைக்க நடவடிக்கை எடுக்கலாம். அதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. நீண்ட நாட்களாக நிரந்தர பஸ் டெப்போ அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வருகிறது. அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் நிரந்தர டெப்போ அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement