வாரியத்தில் 'கிக்' தொழிலாளர்களின் பதிவை அதிகரிக்க எதிர்பார்ப்பு: விழிப்புணர்வு ஏற்பட்டால் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 'கிக்' தொழிலாளர்களான ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கு பொருட்கள், உணவுகளை டெலிவரி செய்வோருக்கு வாரியம் செயல்படுகிறது. இதில் இதுவரை 46 பேர் மட்டுமே பதிந்துள்ளனர். பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மாவட்டத்தில் கொரோனாவுக்கு பிறகு வீட்டில் இருந்து பணி, டெலிவரி பணி, ஆன்லைன் வர்த்தகம் என புதிய தொழில்கள்முளைக்க துவங்கின. இதில் வீட்டில் இருந்து பணி பெரும் ஐ.டி., நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.

மற்ற டெலிவரி பணி, ஆன்லைன் வர்த்தகம் போன்ற பணிகள் கடும் உழைப்புடன் செயல்படுத்தப்படுபவை. இதுவும் ஒரு முக்கியமான வணிக சேவையாக மாறி விட்டது.

இத்தகைய தொழிலாளர்களை 'கிக்' தொழிலாளர்கள் என அழைப்பர்.இவர்கள் தற்காலிகமாக,சுயாதீனமாக பணி செய்வர். இதில் ஓட்டல், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலம் டெலிவரி செய்வோரே வருகின்றனர்.

மாவட்டத்தில் இவர்களுக்கான தொழிலாளர் நலவாரியம் செயல்படுகிறது. இதில் இதுவரை 46பேர் மட்டுமே பதிந்துள்ளனர். இவர்களின் 50 சதவீதம் பேர் தற்காலிகமாக இந்த பணிகளை பார்ப்பதாலும், வேலை கிடைக்கும் இப்பணியில் ஈடுபடும் இளைஞர்கள் அதிகம் இருப்பதாலும் வாரிய பதிவு குறைவாகவே உள்ளது. இது போன்ற சவால்கள் உள்ளது.

சிவகாசி, ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதிகளில் கிக் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். பலருக்கு 'கிக்' தொழிலாளர்களுக்கு நலவாரியம் இருப்பது பற்றிய விழிப்புணர்வே கிடையாது. இதனாலும் எண்ணிக்கை குறைவாகிறது.

மாவட்ட அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும் என சில கிக் தொழிலாளர்கள்எதிர்பார்க்கின்றனர். என்னென்ன திட்டங்கள்,சலுகைகள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப அரசு திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதை நன்றாக செயல்படுத்த வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை. எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Advertisement