போலீஸ் டைரி

பீஹார் வாலிபர் காயம்



பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார் தாஸ், 45. அவிநாசி ரோடு, காந்தி நகரில் தங்கி, அம்மாபாளையம் அருகே தனியார் நிறுவனம் ஒன்றில், கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று பணியில் ஈடுபட்டபோது, இரண்டாவது தளத்தில் இருந்து தவறி விழுந்த அவர், சுற்றுசுவர் மீதுள்ள கம்பி மீது விழுந்து படுகாயமடைந்தார். வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆடு திருடிய 'சிங்கம்'



வெள்ளகோவில் சுந்தராடிவலசை சேர்ந்தவர் முத்துசாமி, 50; விவசாயி. கடந்த, 21ம் தேதி தனக்கு சொந்தமான தோட்டத்தில், 42 செம்மறி ஆடுகளை பட்டியில் அடைத்தார். மறுநாள் சென்ற போது, பட்டியில் இருந்த, ஐந்து ஆடுகள் திருட்டு போனது தெரிந்தது. வெள்ளகோவில் போலீசார், ஆடுகளை திருடிய கிணத்துக்கடவை சேர்ந்த நாகராஜ், 30, சிங்கம், 40, ரமேஷ், 37 ஆகிய மூன்று பேரை கைது செய்து ஐந்து ஆடுகளை மீட்டனர்.

திருடிய மூவர் கைது



தாராபுரத்தை சேர்ந்தவர் சங்கர், 31. ஆலாங்காட்டு பிரிவு.வெற்றிவேல் நகரில் வீடு வாங்கி உள்ளார். கடந்த, ஒன்பது மாதங்களாக வாரத்துக்கு ஒரு முறை மட்டும் புதிய வீட்டுக்கு சென்று வந்தார். வீட்டை நோட்டமிட்ட சிலர், பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த, 12 ஆயிரத்து, 500 ரூபாயை திருடி சென்றனர். அலங்கியம் போலீசார் திருட்டு தொடர்பாக, சென்னையை சேர்ந்த மதன், 25, ராஜேஷ், 25, கோபாலகிருஷ்ணன், 24 என, மூன்று பேரையும் கைது செய்தனர்.

காதல் விவகாரத்தில் ஆவேசம்



பல்லடம், சாமளாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 62. இவரது உறவினர் வசந்தகுமார், 24. வசந்தகுமாரின் காதல் விவகாரம் குறித்து ஆறுமுகம், பெண்ணின் வீட்டில் கூறினார். இதனால், காதலித்து வந்த பெண்ணிடம் வசந்தகுமாரால் பேச முடியவில்லை. போதையில் இருந்த, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. ஆறுமுகத்தை தாக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக அருகே எரிந்து கொண்டிருந்த குப்பையில் ஆறுமுகம் விழுந்தார். தீக்காயமடைந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மங்கலம் போலீசார் வசந்தகுமாரை தேடி வருகின்றனர்.

சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர்



பீஹார் மாநிலத்தை சேர்ந்த, 14 வயது சிறுமி குடும்பத்துடன் திருப்பூரில் தங்கியுள்ளனர். அதே மாநிலத்தை சேர்ந்த முகமது ஜாவீத், 19 என்பவர், அவ்வப்போது சிறுமியின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். நேற்று மதியம் தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுதொடர்பான புகாரின் பேரில், தெற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். முகமது ஜாவீத் மீது 'போக்சோ' வழக்குபதிந்து கைது செய்தனர்.

'போதை' சிறுவர்களுக்கு சிறை



பல்லடம் அருகே, ராயர்பாளையத்தை சேர்ந்தவர் லோகேஸ்வர், 25; பனியன் தொழிலாளி. நேற்று, ராயர்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த இவரிடம், 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், 4 பேர் தகராறில் ஈடுபட்டதுடன், லோகேஸ்வரை தாக்கி காயப்படுத்தினர். பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லோகேஸ்வர் அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரித்தனர்.

இதுதொடர்பாக பல்லடம் பி.டி.ஓ., காலனி, ராயர்பாளையம் பகுதிகளை சேர்ந்த, 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், 4 சிறுவர்களும் மது போதையில் இருந்துள்ளனர். நான்கு பேர் மீதும், பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று நடந்த சம்பவத்தில் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

போதையில் தாக்குதல்; 2 சிறுவர்கள் கைது



கோவை ரத்தினபுரியை சேர்ந்த, 17 வயது சிறுவர்கள் இருவர், பல்லடம் அருகே புத்தரச்சலில் உள்ள தனியார் மில் ஒன்றில் வேலை பார்க்கின்றனர். நேற்று காலை, பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த இருவரும், மது போதையில், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். துப்புரவு தொழிலாளர்கள் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் இருவரையும்கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement