கால்நடைகளுக்கு தடை செய்யப்பட்ட மருந்துகள் வழங்காதீர்: மத்திய அரசு

சென்னை : இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகள், கோழிகளுக்கு, 'குளோரெம்பினிகால் அல்லது நைட்ரோப்யூரான்' என்ற மருந்தை செலுத்த, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.
இது குறித்து, அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய தலைமை இயக்குனர் ராஜீவ்சிங் ரகுவன்ஷி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
உணவுக்காக வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் கால்நடைகளுக்கு, ஊட்டசத்து அளிப்பதற்காக, 'குளோரெம்பினிகால் அல்லது நைட்ரோப்யூரான்' என்ற மருந்து செலுத்தப்படுகிறது. இவற்றை சாப்பிடுவோருக்கு, இம்மருந்துகள் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவது, பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, அந்த மருந்து செலுத்தப்பட்ட, இறைச்சியை உண்பதன் வாயிலாக, மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றால் தடைபடும்.
அதை கருத்தில் வைத்து, அந்த மருந்துகளை கால்நடை பண்ணைகளில் பயன்படுத்த வேண்டாம் என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அந்த மருந்துகளை இறக்குமதி செய்யவும், உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்மருந்துகள் பயன்பாடு உள்ளதா என, மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

