வாலிபர் எரித்து கொல்லப்பட்ட விவகாரம் மச்சான் உட்பட இரண்டு பேர் கைது

ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சின்னகுத்தியை சேர்ந்தவர் சக்திவேல், 25. இவர், அதே ஊரை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த பாப்பம்மா, 22, என்பவரை காதலித்து, கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார்.

பாப்பம்மாவுக்கும், சக்திவேல் வீட்டாருக்கும் ஏற்பட்ட பிரச்னையால், பாப்பம்மா தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். சக்திவேலும் அவருடன் சென்று வசித்தார். கடந்த மாதம், 19ல், சக்திவேல் மாயமானதாக, அவரது வீட்டார் அளித்த புகார்படி, பேரிகை போலீசார் விசாரித்தனர்.

கடந்த, 30ல், ஈரோடு மாவட்டம், பர்கூர் அடுத்த அந்தியூர் வனப்பகுதியில் எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தியதில், அச்சடலம் மாயமான சக்திவேல் என, தெரிந்தது-.

அந்தியூர் போலீசார் விசாரணையில், சக்திவேலை கடைசியாக, மனைவி பாப்பம்மாவின் அண்ணன் வெங்கடேஷ், 32, மற்றும் உறவினர்கள் ராஜேந்திரன், 48, குமார், 22, ஆகியோர், மரம் வெட்ட அழைத்து சென்றது தெரிந்தது.

வெங்கடேஷிடம் விசாரித்த போது, மரம் வெட்ட சென்றபோது, வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில், சக்திவேல் மீது குண்டு காயம் பட்டதாகவும், தாங்கள் தப்பித்து ஓடிவந்து விட்டதாகவும் கூறினார்.

போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் தீவிரமாக விசாரித்தனர். இதில், சக்திவேலை, வெங்கடேஷ் கடத்தி, வனத்தில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து, உடலை தீவைத்து எரித்து விட்டு நாடகமாடியது தெரிய வந்தது. வெங்கடேஷ், ராஜேந்திரன் ஆகியோரை அந்தியூர் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:

சக்திவேல், வெங்கடேஷ் மனைவி மங்கம்மாவுடன் பழகியுள்ளார். இதை வெங்கடேஷ் கண்டித்தார். சக்திவேல் பழக்கத்தை விடவில்லை. ஆத்திரமடைந்த வெங்கடேஷ், சக்திவேலை தீர்த்துக் கட்ட திட்டம் போட்டார்.

அதன்படி, மரம் வெட்ட செல்லலாம் என, ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, அரிவாளால் வெட்டிக் கொன்று உடலை தீ வைத்து எரித்துள்ளார். தலைமறைவான குமாரை தேடி வருகிறோம்.

இவ்வாறு கூறினர்.

Advertisement