கறைபடியும் கல்வித்துறை; அரசுக்கு இல்லை அக்கறை!

6

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், தொடக்க, நடுநிலை என மொத்தம், 437 பள்ளிகள் உள்ளன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம், 97 பள்ளிகளும் உள்ளன. அரசு பள்ளிகள் மேம்பாட்டிற்கும், ஆண்டுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், அரசு பள்ளிகளை நாடி வரும் மாணவர்களை தக்க வைக்க போதுமான அடிப்படை வசதிகள் எட்டாக்கனியாக உள்ளன. அரசு பள்ளி மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் அரசு ஒதுக்கும் நிதியெல்லாம் எங்கே போகிறது என்ற கேள்வி எழுகிறது.



கழிவறை பற்றாக்குறை



பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிட வசதி இல்லை. ஒரு சில பள்ளிகளில், கழிப்பிடங்கள் இருந்தாலும் அவை போதிய பராமரிப்பின்றி உள்ளது. அவற்றை குழந்தைகள் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது.



இடப்பற்றாக்குறையால் ஒரு சில பள்ளிகளில், ஆண், பெண் கழிப்பிடம் எதிர் எதிரே இருப்பதால், தர்மசங்கடமான நிலைக்கு மாணவியர் தள்ளப்பட்டு, இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்க ஆட்கள் இல்லாத சூழல் உள்ளது. இதனால், மாணவியர் வீட்டிற்கு சென்று கழிப்பிடம் செல்வதாக கூறுகின்றனர்.

நிதி போதாது




பள்ளிகளில் கழிப்பறை வசதி இருந்தாலும், அதனை முறையாக பராமரிக்க முடிவதில்லை. நகராட்சி நீங்கலாக, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அரசு பள்ளிகளுக்கு, துாய்மை பணிக்கென, 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.



இதில், கழிப்பறை சுத்தம் செய்யும் துாய்மைப் பணியாளர்களுக்கு, 2,400 ரூபாய் வழங்கவும், மீதமுள்ள 600 ரூபாயில் பிளீச்சிங் பவுடர், பிரஸ் உள்ளிட்ட பொருட்கள் வாங்க வேண்டும். ஆனால், குறைந்த தொகையே வழங்கப்படுவதால், துாய்மைப் பணியாளர்கள் பணிக்கு வர தயக்கம் காட்டுகின்றனர்.


மும்முனை மின் இணைப்பு தேவை என்பதால், பல பள்ளிகளில், நாப்கின் எரியூட்டும் மெஷின் அமைக்கப்பட்டும் பயன்பாடின்றி காணப்படுகிறது.

குடிநீர் வசதியில்லை




பெரும்பாலான பள்ளிகளில் குடிநீர் வசதி இருந்தாலும், அவை முறையான பராமரிப்பின்றி உள்ளது. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்தாலும், அவற்றை முறையாக பராமரிக்க போதுமான நிதி கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. குடிநீர் குழாய்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளது. குடிநீர் குழாய்களில் நீர் கசிவு உள்ளது. குடிக்க, பாத்திரங்கள் கழுவ ஒரே இடமாக உள்ளதால், மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

போதிய கட்டடமில்லை




அரசு தொடக்கப்பள்ளிகள் நடுநிலையாகவும், நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலையாகவும், உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாக தரம் உயர்த்தப்பட்டாலும் அதற்கான கட்டட வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது.



தரம் உயர்த்தப்பட்டாலும், தொடக்கப்பள்ளி வளாகத்திலேயே உயர்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. ஆர்.கோபாலபுரம் பள்ளி வளாகத்திலேயே இட நெருக்கடியில் தொடக்க, உயர்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன.


இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், மேல்நிலைப்பள்ளிக்கான இடம் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கு நிதி இல்லாததால், தன்னார்வலர்கள் உதவியுடன் கட்டடம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.


பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட பெரும்பாலான பள்ளிகளின் நிலை இப்படித்தான் உள்ளதாக கல்வி ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.ஒரு சில தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், தனியார் பள்ளிக்கு நிகராக மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும், கட்டடங்கள் போதுமானதாக இல்லை. அதற்காக பள்ளி நிர்வாகம் முயற்சிகள் எடுத்தாலும், கட்டட வசதி இன்னும் பூர்த்தியடையாமல் உள்ளது.

பாதுகாப்பு தேவை




நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில், பாதுகாவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள், பள்ளி வளாகத்துக்குள் புகுந்து மேஜைகள், கழிப்பிடங்கள், குடிநீர் குழாய்களை சேதப்படுத்தும் செயல்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. சுற்றுச்சுவர் அல்லது கம்பி வேலி இல்லாமல் இருந்தால், அந்த வசதிகளை ஏற்படுத்தி, இரவு காவலர் நியமிக்க வேண்டும்.

மைதானங்கள் எங்கே?




பள்ளிகளில் எல்லா இடத்திலும் கட்டடங்கள் கட்டப்பட்டு, விளையாட்டு மைதானம் குறுகிபோயுள்ளது. மைதானங்கள் உள்ள பள்ளிகளிலும் போதிய பராமரிப்பின்றி காணப்படுகின்றன.

படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதை போன்று, விளையாட்டுக்கு தருவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால், மாணவர்கள் விளையாட்டுகளில் முழு அளவில் ஜொலிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

- நிருபர் குழு -

Advertisement