பிரபல சுற்றுலா சைக்கிள் நிறுவனத்தில் 'ரெய்டு' கணக்கில் வராத ரூ. 2 கோடி பறிமுதல் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் அதிரடி 

புதுச்சேரி: புதுச்சேரியில் இயங்கி வரும் பிரபல சுற்றுலா சைக்கிள் நிறுவனத்தில் சைபர் கிரைம் போலீசார் நேற்று இரவு நடத்திய அதிரடி சோதனையில் 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரிக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்கள் இங்குள்ள சைக்கிள், ரிக்ஷா, இ- பைக் உள்ளிட்டவைகள் மூலம் சுற்றுலா தளங்களை சென்று பார்வையிடுகின்றனர்.

இதனைப் பயன்படுத்தி சுற்றுலா சைக்கிள் நிறுவனங்கள் புதுச்சேரியில் அதிகரித்து வருகின்றன. அதில், சில நிறுவனங்கள், பொது மக்களை சுற்றுலா சைக்கிள் திட்டத்தின் மூலம் முதலீடு செய்ய வைத்து,மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

அதன்பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் நேற்றிரவு, காமராஜர் சாலை பழைய கலெக்டர் அலுவலகம் அருகே இயங்கி வரும் பிரபல சுற்றுலா சைக்கிள் நிறுவனத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

நிறுவனத்தின் அனைத்து கதவுகளை மூடி, உள்ளே சோதனை செய்தபோது, அங்கு கணக்கில் வராத 2 கோடி ரூபாய் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வருவாய்த் துறையினர் முன்னிலையில், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் நிறுவனத்தின் வணிக உரிமம் சான்றிதழ், நிறுவனத்தின் தலைமையிடம் எங்கு உள்ளது.

உரிமையாளர் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பினர். இதற்கு நிறுவன ஊழியர்கள் யாரும் சரியாக பதில் அளிக்காததால், நிறுவனத்திற்கு வருவாய் துறை மூலம் சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சோதனை குறித்து போலீசார் கூறுகையில், 'புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சுற்றுலா சைக்கிள் நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, இந்த நிறுவனம் ஒரு நபர் ரூ.4.5 லட்சம் முதலீடு செய்தால், அவருக்கு மாதம் ரூ. 52,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். பின்னர், 9 மாதங்கள் கழித்து அவர் கட்டிய ரூ. 4.5 லட்சம் பணத்தை பெற்று கொள்ளலாம் என்ற கவர்ச்சி கரமாக திட்டத்தை செயல்படுத்தி வருவதும், இதில் புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளதால்,45 கோடி ரூபாய்க்கு மேல் நிறுவனத்தில் மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.

Advertisement