25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தனிப்பட்ட முறையில் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால், அந்த உத்தரவை ஏற்று புதிதாக ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு துவக்கி உள்ளது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க பள்ளி தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் என 25 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். இதில் முறைகேடு நடந்ததாகக் கூறி கோல்கட்டா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட், இந்த நியமனத்தை ரத்து செய்தது.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் சஞ்ச் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, கோல்கட்டா ஐகோர்ட்டின் உத்தரவை உறுதி செய்தனர்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் முறைகேடு நடந்து உள்ளது. அதன் நம்பகத்தன்மை மற்றும் சட்டப்பூர்வத் தன்மை மீறப்பட்டு உள்ளது. ஐகோர்ட் உத்தரவில் தலையிடுவதற்கு எந்த அவசியமும் இல்லை. நியமனங்கள் அனைத்திலும் மோசடி நடந்துள்ளது எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில், எனக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீதிபதிகள் மீது எனக்கு மரியாதை உள்ளது. அதேநேரத்தில், மனிதாபிமான அடிப்படையில் எனது கருத்தை நான் பதிவு செய்கிறேன். தவறான தகவலை கூறாதீர்கள். குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.
அதேநேரத்தில் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும். மீண்டும் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டு உள்ளன. சிலர் செய்த தவறுக்காக அனைவரையும் தண்டிப்பது ஏன்? 25 ஆயிரம் பேர் மட்டும் பாதிக்கப்படப்போவது கிடையாது. அவர்களின் குடும்பமும் பாதிக்கும்.
நீதிபதி வீட்டில் பணம் சிக்கினால், அவர் பணியிட மாற்றம் மட்டும் செய்யப்படுகிறார். ஆனால், தேர்ச்சி பெற்றவர்களை இடம் மாற்றம் செய்யக்கூடாது. இந்த உத்தரவை முதலில் வழங்கிய நீதிபதி தற்போது பா.ஜ., எம்.பி., ஆக உள்ளார். இந்த விவகாரத்தில் பா.ஜ.,வும் கம்யூனிஸ்ட் சதி செய்து உள்ளன. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.










மேலும்
-
நிறைவு பெற்றது பட்ஜெட் கூட்டத்தொடர்: பார்லி., காலவரையின்றி ஒத்திவைப்பு
-
‛இளமை எனும் பூங்காற்று...' புகழ் நடிகர் ரவிக்குமார் காலமானார்
-
தாய்லாந்தில் 'பிம்ஸ்டெக்' மாநாடு; முக்கிய தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
-
கார் பார்க்கிங் பிரச்னை; பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது!
-
டாஸ்மாக் வழக்கு; வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி தமிழக அரசு மனு
-
பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் சொத்து ரூ. 170 கோடி