கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மதுரை: '' கூட்டணியில் விரிசல் வராதா என நப்பாசையுடன் சிலர் உள்ளனர். ஆனால், அது நடக்காது'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இடம் தர மாட்டோம்
மதுரையில் நடக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
எல்லாரும் எல்லாம் எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவ சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற லட்சியத்திற்கு கூட்டணி அமைக்கிறோம். மாற்றத்தை நோக்கிய நமது பயணம் திகழ்கிறது. உடனே நிகழ மாற்றம் என்பது மேஜிக் அல்ல. அது 'பிராசஸ்'
இந்த பயணத்தில், 2019 முதல் நாம் இணை பிரியாமல் இருக்கறோம். ஏனென்றால் நமது இலக்கு என்ன ? நாம் யாரை எதிர்க்க வேண்டும்? எதற்காக எதிர்க்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு இயங்கி கொண்டு உள்ளோம்.
தமிழகத்தில் உள்ள கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என நப்பாசையுடன் சிலர் செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர்.அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது. யாரும் அதற்கு இடம் தர மாட்டோம்.
அலர்ஜி
கூட்டாட்சி என்று சொல், மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜியாக உள்ளது. அப்படியே மாறி விட்டது. மாநில உரிமைகளுக்காக பேசுகிறது அவர்களுக்கு பிடிக்கவில்லை. பா.ஜ.,வின் ஏதேச்சதிகாரத் தன்மையால், அதிகமாக பாதிப்படைவர்களில் முதன்மையாக இருப்பது நானும், பினராயி விஜயனும் தான். இங்கு நாங்கள் பேசுவதை வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளலாம்.
சுயாட்சி
மாநில சுயாட்சி என்பது திமுக.,வின் கொள்கை. இதனை அண்ணாதுரை, கருணாநிதி வலியுறுத்தி உள்ளனர். தமிழ் சமுதாயத்தைகாக்க, தேசிய இனங்களை காக்க, மாநிலங்கள் சுயமரியாதையுடன் வாழ சுயாட்சி தீர்மானம் விளங்கிக் கொண்டு உள்ளது.
மாநில சுயாட்சிக்காக நாங்கள் தொடர்ந்து போராடிவருகிறோம். இதற்கு எதிராக பா.ஜ., அரசு உள்ளது.
மாநில அரசுகள் டில்லிக்கு காவடி தூக்கும் நிலையை மாற்றி அதிகார பரவலுக்கு வழிவகுக்கும் அணுகுமுறையாக இருக்கும் என சொல்லி பிரதமர் ஆன மோடி ஆட்சி தான், மாநிலங்களை அழிக்கிற ஆட்சியாக, மாநில மொழிகளை சிதைக்கிற ஆட்சியாக, பல்வேறு தேசிய இன மக்களை ஒழிக்கிற ஆட்சியாக, பல்வேறு பண்பாடுகளை கொண்ட மக்களின் நம்பிக்கையை சிதைக்கிற ஆட்சியாக, அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகளை டம்மியாக மாற்றி ஒற்றை ஆட்சி கொண்ட பாசிச ஆட்சியாக இன்றைய பா.ஜ., ஆட்சி உள்ளது.
அதிகாரம்
ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே மதம்,ஒரே உணவு, ஒரே தேர்தல் ஒரே பண்பாடு என்ற ஒற்றைத்தன்மை கொண்ட ஒரு கட்சி ஆட்சியாக முதலில் அமைந்து ஒரே நபரின் கைகளில் அதிகாரத்தை குவிக்க தான் அது பயன்படும். பிறகு அந்த தனி மனிதர் வைத்ததுதான் சட்டம். அவர் சொல்வது தான் வேதம்.அவர் அங்கீகரிக்கப்பட்டவருக்கு மட்டும் தான் அதிகாரம். அவரால் ஆசிர்வதிக்கப்பட்டவருக்கு மட்டும் தான் நிதி மூலதனமாக ஆகமாறிவிடும்.
என்ன
பல்வேறு பரிமாணங்களில் வரும் பாசிசத்தை அழிக்க வேண்டும். தொடர் பிரச்சாரத்தால் மட்டும் தான் அதனை வீழ்த்த முடியும். மக்கள் நலன் என்ற புள்ளியில் நாம் ஒன்றாக இருக்க வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே சுயாட்சி காப்பாற்றப்படும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டும் என சர்க்காரியா மற்றும் பூஞ்சி கமிஷன் அளித்த பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என 2012ல் முதல்வராக இருந்த மோடி கேட்டார். தொடர்ந்து 3வது முறை பிரதமர் ஆன மோடி அதனை செயல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?
பல்வேறு சட்டங்களின் மூலமாக மாநிலங்களின் உரிமைகளை பறிக்கிறீர்களே?
ஜிஎஸ்டி மூலம் மாநில நிதி உரிமையை எடுத்து கொண்டீர்களே?
எதிர்க்கட்சி ஆளும் மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு அனுமதி தருவதே கிடையாது.
மத்திய அரசு சார்பில் சிறப்பு திட்டம் அளிப்பது கிடையாது.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களி்ல கவர்னர்கள் பா.ஜ., மாநில தலைவராக மாற்றி முழு நேர அரசியல்வாதியாக செயல்பட வைக்கின்றனர்.
மாநிலங்களின் வளர்ச்சியை தடுக்கப்படுகின்றன.
பா.ஜ.,விற்கு எதிரான மாநில அரசுகளை மிரட்டுகிறீர்கள். ஆட்சியை கவிழ்க்கிறீர்கள். கட்சியை உடைக்கிறீர்கள். கட்சி மாற கட்டாயப்படுத்துகின்றீர்கள்.மாநிலங்களே இருக்கக்கூடாது என நினைக்கின்றீர்கள்.
பதில் இல்லை
கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு என்ற திட்டத்தின் மூலம் சிதைக்க நினைக்கிறது பா.ஜ., அரசு. தமிழகம், கேரளா, கர்நாடகா எதிர்க்கிறது. இதற்கு எதிராக கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பிரதமர் மோடி பதில் சொல்லவில்லை. அரசியல் சட்ட உரிமைகளை பறிக்கிற ஆட்சியை பா.ஜ., நடத்துகிறது. மாநில சுயாட்சி, கூட்டாட்சி, மத நல்லிணக்கத்திற்கு எதிரான, மக்களுக்கு எதிரான பா.ஜ., ஆட்சியின் முடிவில் தான் இந்தியாவின் கூட்டாட்சி மலரும். அதை உருவாக்க இந்தியா முழுதும் உள்ள ஜனநாயக சக்திகளை திரட்டுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.










மேலும்
-
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
வக்ப் மசோதாவை ஆதரித்த முஸ்லிம் நபர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
-
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்கள், நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
கர்நாடக அரசு தீவிரம்: மேகதாது விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
-
பைக்கில் மறைந்திருந்த பாம்பு கடித்து இளைஞர் பலி
-
டிராக்டர் கிணற்றில் விழுந்ததில் பெண்கள் 8 பேர் பலி; மஹா.,வில் பரிதாபம்