கர்நாடக அரசு தீவிரம்: மேகதாது விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ''மேகதாது அணைக்கு அனுமதி பெற கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழக அரசு அமைதி காக்காமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான சிவக்குமார் ஆகியோர் டில்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்திற்கு காவிரி நீர் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் கர்நாடகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதைத் தடுப்பதில் தமிழகம் அலட்சியம் காட்டுவது சரியல்ல.
தண்ணீர் கிடைக்காது!
70 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 184 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகைபாலைவனமாகிவிடும். அதைத் தடுக்க வேண்டியது அவசர, அவசியத் தேவையாகும்.
ஐயம் தான்
மேகதாது அணை கட்ட கர்நாடகம் தீவிரம் காட்டுவதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் போதெல்லாம், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்தக் கொம்பனாலும் மேகதாது அணையைக் கட்ட முடியாது என்று கூறி கடந்து சென்று விடுகிறது. அதுமட்டுமின்றி, கர்நாடக ஆட்சியாளர்களிடம் ஒட்டி உறவாடுகிறது. இவற்றைப் பார்க்கும் போது, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் அதன் உரிமையை இழந்து விடுமோ? என்ற ஐயம் தான் ஏற்படுகிறது.
தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடியாது என்று உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தீர்ப்பளித்திருப்பது உண்மை தான். வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்த மத்திய அரசு, அணை கட்டவும் அனுமதி அளிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காவிரி விவகாரத்தில் தமிழகம் அலட்சியமாக இருந்ததன் காரணமாகத் தான் கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, சுவர்ணவதி ஆகிய 4 அணைகள் கட்டப்பட்டுள்ளன.
அலட்சியம்
அதேபோல், இப்போதும் மேகதாது அணை கட்டப்படுவதற்கு தமிழக அரசின் அலட்சியம் காரணமாக இருந்து விடக் கூடாது. மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018ம் ஆண்டில் மத்திய அரசு அளித்த அனுமதி செல்லுபடியாகும் வரை மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டு தான் இருக்கும்.
அதை ரத்து செய்வது தான் மேகதாது அணையை நிரந்தரமாகத் தடுப்பதற்கான ஒரே வழியாகும். எனவே, அந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்யும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும்
-
தமிழக பா.ஜ., தலைவர் யார்: வெளியானது அறிவிப்பு
-
மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்: சீனா உறுதி
-
முதல்வர் நிகழ்ச்சிக்கு தனியார் பள்ளி பஸ்களா: அண்ணாமலை எதிர்ப்பு
-
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் பிடிவாரண்ட்
-
தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்:வானிலை மையம் எச்சரிக்கை
-
சீன அதிபர் புத்திசாலி நபர்: அதிபர் டிரம்ப் பாராட்டு