மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி; கோப்பையை கைப்பற்றியது திருவள்ளூர்

கோவை; கோவையில் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் திருவள்ளூர் அணி, துாத்துக்குடி அணியை வென்று முதலிடம் பிடித்தது.

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான, மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, கோவை நேரு ஸ்டேடியம் எதிரே கூடைப்பந்து மைதானத்தில் ஐந்து நாட்கள் நடந்தது.

இப்போட்டியில், 41 அணிகள் பங்கேற்ற நிலையில் முதல் மூன்று நாட்களுக்கு 'லீக்' முறையிலும், இரு நாட்கள் 'நாக் அவுட்' முறையிலும் போட்டி நடந்தது.

பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில் திருவள்ளூர் அணி, 87-80 என்ற புள்ளிகளில் கோவை மாவட்ட 'ஏ' அணியை வென்றது.

இரண்டாம் அரையிறுதியில், துாத்துக்குடி அணி, 76-67 என்ற புள்ளிகளில் தேனி அணியை வீழ்த்தியது.

இறுதிப் போட்டியில், திருவள்ளூர் மாவட்ட அணி, 96-76 என்ற புள்ளிகளில் துாத்துக்குடி மாவட்ட அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது.

மூன்று மற்றும் நான்காவது இடங்களுக்கான போட்டியில் கோவை மாவட்ட 'ஏ' அணியும், தேனி மாவட்ட அணியும் மோதின. கோவை மாவட்ட 'ஏ' அணி, 82-73 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தையும், தேனி அணி நான்காம் இடத்தையும் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் செல்வராஜ் பரிசுகள் வழங்கினார். கழக செயலாளர் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement