காற்றில் பறக்கவிடப்படும் இணை இயக்குனர் உத்தரவு; 40 கி.மீ., துாரத்துக்கு அலைக்கழிக்கப்படும் ஆசிரியர்கள்

கோவை; கோவை மாவட்டத்தில் அரசுத் தேர்வுகள் இணை இயக்குனரின் உத்தரவையும்மீறி தொலை துாரத்தில் உள்ள மதிப்பீட்டு மையங்களுக்கு பணியமர்த்துவதாக ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச், 3 முதல், 25ம் தேதி வரையும், பிளஸ்1 தேர்வு, 5 முதல், 27ம் தேதி வரையும் நடந்தது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இரு வகுப்புகளிலும், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியானது, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் நகராட்சி பெண்கள் பள்ளியிலும், கோவை கல்வி மாவட்டத்தில் சர்வஜன பள்ளி, அவிலா பள்ளிகளிலும் இன்று துவங்குகிறது.

மூன்று மையங்களிலும், 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விடைத்தாள்களை திருத்த உள்ளனர். இந்நிலையில், கோவை கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பொள்ளாச்சியிலும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கோவையிலும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பணிபுரியும், 60 ஆசிரியர்கள் கோவை கல்வி மாவட்டத்தில் வசிக்கின்றனர். கோவை கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் , 10 ஆசிரியர்கள், பொள்ளாச்சியிலும் வசிப்பதால், அவரவர் வசிக்கும் கல்வி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்து பணி ஒதுக்கீடு செய்ய கோரினோம்.

ஆனால், முதன்மைக் கல்வி அலுவலர் எங்களது கோரிக்கைகளை முழுமையாக நிராகரித்துவிட்டார். பல ஆண்டுகளாகவே ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் விடைத்தாள் திருத்த முகாமில் பணி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

அவரவர் வீட்டு முகவரிக்கு அருகே உள்ள மதிப்பீட்டு மையத்தில் பணிபுரிய அரசு தேர்வுகள் இணை இயக்குனரும் அனுமதி அளித்துள்ளார். ஆனால், அவரது உத்தரவை இங்கிருக்கும் கல்வி அதிகாரிகள் மதிக்காமல், வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள இச்சூழலில் எங்களை அலைக்கழிக்கின்றனர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக, தகவல்கள் பெற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியை பலமுறை தொடர்பு கொண்டும் அவர் மொபைல் அழைப்பை ஏற்கவில்லை.

விரும்பும் மையத்தில்!

அரசு தேர்வுகள் இணை இயக்குனர்(பணியாளர்) அமுதவல்லி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்,'ஒரு வருவாய் மாவட்டத்திற்குள் அமைக்கப்பட்ட விடைத்தாள்கள் மதிப்பீட்டு முகாம்களில், ஆசிரியர்கள் தான் சார்ந்த கல்வி மாவட்டத்திற்கு அருகே, மற்றொரு கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், அவர்கள் விரும்பும் மையத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் பணியமர்த்தலாம்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement