செம்மொழி பூங்காவுக்குள் என்ன நடக்குது; நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு
கோவை; கோவையில் உருவாக்கப்படும் செம்மொழி பூங்காவில் என்னென்ன வேலைகள் நடக்கின்றன என, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு நேற்று ஆய்வு செய்தார்.
கோவை காந்திபுரத்தில், 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா உருவாக்கும் பணி, மாநகராட்சியால் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்தாண்டு டிச., 23ல் இப்பணி துவங்கியது; வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 22 வகையான தோட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்கு வர வேண்டுமென கூறியிருப்பதால், அதற்குள் பணிகளை முடிக்க முடியுமா என்கிற சந்தேகம் அரசு துறை உயரதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு, நேற்று செம்மொழி பூங்கா வளாகத்தில் நேரடியாக ஆய்வு செய்தார்.
என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும்; தற்போது செய்யப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் விளக்கினர்.
இரண்டு மாதத்துக்குள் பணிகளை முழுமையாக முடிக்க வாய்ப்பில்லை என்பதால், வேகப்படுத்த மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்பின், 100வது வார்டு கணேசபுரம் பகுதியில், குறிச்சி - குனியமுத்துார் பகுதிகளுக்கான ஆழியார் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.
மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதை ஆய்வுக்கு வந்திருந்த அதிகாரி, உண்மையென நம்பிச் சென்றிருக்கிறார்.
ஆனால், மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சில இடங்களில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை, சில இடங்களில் ஏழு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளையாகிறது.
சில பகுதிகளில் மட்டுமே மூன்று நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது; அதனால், தண்ணீர் பிரச்னை இல்லை என்ற எண்ணத்தில், ஆய்வுக்கு வந்த அதிகாரி திரும்பிச் சென்றிருக்கிறார்.
மேலும்
-
டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்
-
ஆடிட்டரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
-
முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
-
சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!