ஓய்வு கிடைப்பதால் பீட் ஆபீசர்கள் நிம்மதி! ஷிப்ட் அடிப்படையில் போலீசாருக்கு பணி

கோவை; மாநகரை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபடும் பீட் ஆபீசர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்குவதால் நிம்மதியடைந்துள்ளனர்.

மாநகர பகுதிகளில் குற்றத்தடுப்பு நடவடிக்கை, பொது மக்கள் பாதுகாப்பு, பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு, முதியோர் நலன் என மாநகரை 24 மணிநேரமும் கண்காணிக்கும் வகையில் கோவை மாநகர கமிஷனர் சரவண சுந்தர் 'பீட் ஆபீசர்' திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இத்திட்டத்தின் மூலம், 52 இரு சக்கர வாகனங்களில், தலா இரண்டு போலீசார் என 3 ஷிப்ட்கள் அடிப்படையில் 156 பேர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். தினமும், மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்கள், பிரச்னை ஏற்படும் இடங்களில் இவர்கள் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த, ஜன., 13ம் தேதி இத்திட்டத்தை கமிஷனர் துவக்கி வைத்த போது, பீட் ஆபீசர்ஸ் ஒவ்வொருவரும் ஏ,பி,சி., ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற திட்டமிட்டுள்ளோம். அதன் படி அவர்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கும். புத்துணர்ச்சியாக பணியாற்ற முடியும் என்றார்.

ஆனால், பீட் ஆபீசர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, சில ஸ்டேஷன்களில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதால் பீட் ஆபீசர்களாக நியமிக்கப்பட்ட போலீசார், ஸ்டேஷன் வேலைகளையும் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பல போலீசார் ஓய்வு இல்லாமல், துாக்கமின்றி, மன உளைச்சலுக்கு ஆளாகினர். இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் திட்டத்தின் துவக்கத்தில் அறிவித்தபடியே, அனைத்து ஸ்டேஷன்களில் பணியாற்றும் 'பீட் ஆபீசர்களுக்கு' ஏ,பி,சி., ஷிப்ட் அடிப்படையில் பணி ஒதுக்க உத்தரவிட்டார். அதன்படி, ஏ ஷிப்ட் காலை 8 முதல் மதியம் 2 மணி வரையும், பி ஷிப்ட் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும், சி ஷிப்ட் இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரையும் போடப்பட்டுள்ளது.

இதனால் போலீசாருக்கு போதுமான ஓய்வு கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.

போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தெரிவிக்கையில், ''பீட் ஆபீசர் சிஸ்டம் கொண்டு வந்த பிறகு மாநகர பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன. அடிதடி, வீடு புகுந்து திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் கடந்தாண்டை விட குறைந்துள்ளது. மேலும் போலீசாருக்கு போதுமான ஓய்வு அளித்தால் சிறப்பாக பணியாற்றுவார்கள் என அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும் வகையில் ஷிப்ட் திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement