மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின், இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, கடந்த ஜன., மாதம், விமான கோபுரம் ராஜகோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த, 31ம் தேதி, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.

கடந்த, 1ம் தேதி, யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை, 108 மூலிகை பொருட்கள் ஆகுதி, பேரொளி வழிபாடு, மலர் போற்றுதல், திருமுறை விண்ணப்பம் நடந்தது. மாலை, 4:15 மணிக்கு, ஐந்தாம் கால யாக பூஜை, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடந்தது.

இன்று காலை, 5:45 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜையும், காலை, 8:30 மணிக்கு, ராஜகோபுரம், அனைத்து விமானங்கள் மற்றும் திருச்சுற்று தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்; காலை, 09:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, ஆதி மூலவர் ஆகிய மூல மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமிக்கு பெரும் திருமஞ்சனமும், பேரொளி வழிபாடும், திருக்கல்யாணமும், பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் நடக்கிறது.

கும்பாபிஷேகத்தை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகள் குறித்து, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப்பின், கலெக்டர் கூறுகையில்,மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பக்தர்கள் நிற்கும் இடங்களில் நிழற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. படிக்கட்டுப் பாதையில், வெப்பத்தை தணிக்க, வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. அடிவாரத்தில், 2,000 வாகனங்கள் பார்க்கிங் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் நிற்கும் இடத்தில் இருந்து, நேரலையில் கும்பாபிஷேகத்தை காண, 10 எல்.இ.டி.,திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 110 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,என்றார்.

Advertisement