மனைவி, 2 மகன்களை கொன்று மின்வாரிய அதிகாரி தற்கொலை

4

கலபுரகி; கர்நாடகாவில் மனைவி, இரண்டு மகன்களை கொலை செய்த மின்வாரிய அதிகாரி, தானும் தற்கொலை செய்து கொண்டார்.


கர்நாடக மாநிலம், கலபுரகி நகரில் வசித்தவர் சந்தோஷ், 45. இவர் மின்வாரியத்தில் உதவி கணக்கு அதிகாரியாக பணியாற்றினார்.

தகராறு



இவரது மனைவி ஸ்ருதி, 35. தம்பதிக்கு முனீஷ் என்ற, 9 வயது மகனும், பிறந்து மூன்று மாதமேயான அனிஷ் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன் சந்தோஷுக்கு, ஸ்ருதியின் குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டது. இதனால் தாய் வீட்டுக்கு செல்ல கூடாது என, மனைவியை கட்டுப்படுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. தவிர, குடும்ப பிரச்னை, ஸ்ருதியை தாய் வீட்டுக்கு அனுப்பாதது போன்ற காரணங்களால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு நடந்தது.



நேற்று முன்தினம் இரவு, சந்தோஷ் பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது, வழக்கம் போல வாக்குவாதம் நடந்தது. இது குறித்து ஸ்ருதி, தன் தந்தைக்கு போன் செய்து நடந்ததை கூறினார். தந்தையும் பொறுமையுடன் இருக்கும்படி மகளை சமாதானம் செய்து உள்ளார்.


இதனால் கோபமடைந்த சந்தோஷ், மனைவி, இரண்டு மகன்களின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின், தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப பிரச்னை



நேற்று காலை, இவர்கள் வெளியில் வராததை அறிந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, நால்வரும் சடலமாக கிடந்தது தெரியவந்தது. கலபுரகி போலீசார், நால்வரின் உடல்களை மீட்டு, பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவத்துக்கு குடும்ப பிரச்னை காரணமா அல்லது வேறு காரணம் உள்ளதா என, விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement