வக்ப் சட்டத்திருத்தம்: நீண்ட நேரம் செயல்பட்ட பார்லி., !

2


புதுடில்லி: வக்ப் சட்டத்திருத்த மசோதா மற்றும் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான தீர்மானத்திற்காக ராஜ்யசபா, நீண்ட நேரம் செயல்பட்டு உள்ளது. அவை வரலாற்றில் நீண்ட நேரம் செயல்படுவது இது இரண்டாவது முறையாகும். லோக்சபாவும் நீண்ட நேரம் செயல்பட்டு உள்ளது.

வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று ராஜ்யசபா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. காலை 11 மணிக்கு அவை கூடிய நிலையில், தொடர்ந்து வக்ப் சட்டத்திருத்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இடைவேளையின்றி விவாதிக்கப்பட்டது. நள்ளிரவு 2 மணிக்கு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. பிறகு பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதற்கான தீர்மானமும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அனைத்து நடவடிக்கைகளும் முடிந்து மறுநாள் அதிகாலை 4:02 மணியளவில் ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டது. இதன் மூலம், ராஜ்யசபா வரலாற்றில் நீண்ட நேரம் அவை செயல்பட்டது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்னர், கடந்த 1981ம் ஆண்டு செப்., 17 ல், அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மறுநாள் அதிகாலை 4:43 மணி வரை அவை செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

லோக்சபா



அதேபோல், லோக்சபாவிலும் வக்ப் சட்டத்திருத்த மசோதா மற்றும் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற அவை 15:41 மணி நேரம் தொடர்ந்து செயல்பட்டு உள்ளது.
வக்ப் மசோதாவிற்கு மட்டும் 12 மணி நேரம் விவாதம் நடந்து அதிகாலை 1:49 மணியளவில் ஓட்டெடுப்பு துவங்கி 1:56 மணிக்கு முடிவடைந்தது. மணிப்பூர் மீதான விவாதம் 41 நிமிடங்கள் நடந்தது.

வக்ப் சட்டத்திருத்த மசோதா மீது 60 எம்.பி.,க்கள் பேசி உள்ளனர்.

இதற்கு முன்னர், ஜனநாயகம் மற்றும் ஜனநாயக அமைப்புகள் தொடர்பான விவாதத்திற்காக கடந்த 1997ம் ஆண்டு லோக்சபா 20:08 மணி நேரம் செயல்பட்டது.

முன்னதாக, 1993ம் ஆண்டு லோக்சபா ரயில்வே பட்ஜெட்டிற்காக 18:35 மணி நேரமும்,
1998 ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டிற்காக 18:04 மணி நேரமும் செயல்பட்டு உள்ளது.

2002 ல் குஜராத் கலவரம் தொடர்பாக விவாதிக்க 17:25 மணி நேரம் லோக்சபா இயங்கி உள்ளது.

1981 ம் ஆண்டு அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்திற்காக 16:68 மணி நேரமும்,
2021 ல் கோவிட் தொடர்பாக 13:19 மணி நேரமும் லோக்சபாவில் விவாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது

Advertisement