ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்துங்க; பால் உற்பத்தியாளர்கள் போர்க்கொடி
மதுரை : பால் கொள்முதல் விலையை ரூ.10 வரை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் போர்க்கொடி துாக்கியுள்ளது.
கர்நாடகாவில் ஏப்.,1 முதல் நந்தினி பால், தயிர் விற்பனை விலை ரூ.4 உயர்த்தப்பட்டது. அத்துடன் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கான கொள்முதல் விலையும் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழகத்திலும் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் 2 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
ஆனால் போராட்டத்தின் வலுவை குறைக்கும் வகையில் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத் தொகை வழங்கி தமிழக அரசு அறிவித்தது. தற்போது ஊக்கத் தொகை வழங்குவது நடைமுறையில் இருந்தாலும் வருவாய் உள்ள ஆவின் ஒன்றியங்களில் தான் சரிவர ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. பல ஒன்றியங்களில் முறையாக கிடைக்கவில்லை என புகாரும் உள்ளது. இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்பே பசும் பால் லிட்டருக்கு ரூ.35 ல் இருந்து ரூ.45 ஆகவும், எருமை பால் 1 லிட்டருக்கு ரூ.45லிருந்து ரூ.55 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் போர்க்கொடி துாக்கி போராட்டங்களை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மாநில இணை செயலாளர் வெண்மணிசந்திரன் கூறியதாவது: நெல், கரும்புக்கான விலை நிர்ணயம் தொடர்பாக குறிப்பிட்ட காலத்தில் அரசு உயர்த்தி வழங்குகிறது. ஆனால் பால் விலையில் மட்டும் மாற்றம் ஏற்படுவதில்லை. விலையை உயர்த்த கோரி 2 ஆண்டுகளாக போராடியும் நடவடிக்கையும் இல்லை. உற்பத்தியாளர்களை சமாளிக்கும் வகையில் 2023 டிசம்பரில் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத் தொகை வழங்கியது. ஆனால் அதுவும் சரிவர உற்பத்தியாளர்களுக்கு கிடைப்பதில்லை. அதேநேரம் ஆவின் லிட்டருக்கு ரூ.35 வரை வழங்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் பாலுக்கு ரூ.40 வரை வழங்குவதால் பலர் தனியாருக்கு கொடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே பால் கொள்முதல் விலையை உடன் அரசு உயர்த்தி வழங்க வேண்டும். இதுதொடர்பாக பலகட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதற்காக ஆவினுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடுசெய்யும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை ஆவினுக்கு அதற்கான நிதியை விடுவிக்கவில்லை. இவ்வகையில் ரூ. ஆயிரம் கோடிக்கு மேல் ஆவின் ஒன்றியங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான நிலுவையை அரசு உடன் வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
சபரிமலையில் புதிய பஸ்ம குளம் 6 மாதத்தில் முடிக்க திட்டம்
-
புகார் பெட்டி
-
ஒரகடம் சாலையில் விழுந்து கிடக்கும் பேரிகேட் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
-
மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
-
வகுப்பறையில் மாணவனை தாக்கிய கல்லுாரி விரிவுரையாளர் சஸ்பெண்ட்
-
பஞ்சாபில் 14 தாக்குதல்கள் நடத்திய பயங்கரவாதி அமெரிக்காவில் கைது