பொன்முடி வாயை திறந்தாலே அசிங்கம், அவதுாறு, ஆபாசம்: உதயகுமார் கண்டனம்
மதுரை : 'அமைச்சர் பொன்முடி வாயைத் திறந்தாலே அசிங்கம், அவதுாறு, ஆபாசம், கொச்சைதனம் தான்' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: தி.மு.க., அரசின் அமைச்சரவையில், இழுக்கின் முதலிடமாக இருப்பவர் பொன்முடி. வாயைத் திறந்தாலே அசிங்கம், அவதுாறு, ஆபாசம், கொச்சைத்தனம் தான். அதன் உச்சமாக மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பெண்களையும், மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தி அவர் பேசியுள்ள பேச்சு நாறிக்கொண்டு இருக்கிறது.
தி.மு.க.,-வின் மரபணுவில் கலந்ததுதான் இந்த ஆபாசமும் வக்கிர புத்தியும். மனித நாகரீகம் வளர்ந்துவிட்ட இந்த காலத்திலும் இவர்கள் நாகரீகமற்ற, ஆபாச எண்ணம் படைத்த காட்டுமிராண்டிகளாக தான் இருக்கின்றனர் என்பது கடும் கண்டனத்திற்குரியது. பொன்முடியின் இந்த ஆபாச பேச்சை அமைச்சர் சேகர்பாபு ஏற்கிறாரா. மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவரான ருக்மணியின் மகனான அமைச்சர் தியாகராஜன் ஏற்கிறாரா.
வெறும் கண்துடைப்புக்காக பொன்முடியின் கட்சிப் பதவியை மட்டும் பறித்து ஸ்டாலின் நடத்தும் நாடகத்தை மக்கள் துளிகூட நம்ப மாட்டார்கள். உண்மையான நடவடிக்கை என்பது அமைச்சர் பதவியை பறிப்பதுதான். ஆபாச பேச்சு பேசிய பொன்முடி அமைச்சர் பதவிக்கே தகுதியற்றவர். உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். பொன்முடி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
