கனடா கேப்டன் கைது * கஞ்சா வழக்கில்...

பார்படாஸ்: அளவுக்கு அதிகமாக கஞ்சா வைத்திருந்த கனடா கிரிக்கெட் அணி கேப்டன் நிக்கோலஸ் கிர்டன் கைது செய்யப்பட்டார்.
வெஸ்ட் இண்டீசின் பார்படாசை சேர்ந்தவர் நிக்கோலஸ் கிர்டன் 26. இவரது தாயார் கனடாவை சேர்ந்தவர் என்பதால், கனடாவுக்கு இடம் பெயர்ந்தார். 2018ல் கனடா அணியில் சேர்க்கப்பட்ட இவர், ஓமன் அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார். 21 ஒருநாள் (514 ரன்), 28 'டி-20' (627) போட்டியில் பங்கேற்ற கிர்டன், கடந்த ஆண்டு ஜூலை மாதம் கனடா அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
வரும் ஏப். 18ல் துவங்கவுள்ள வட அமெரிக்க கோப்பை தொடரில் களமிறங்க இருந்தார்.
இதனிடையே பார்படாஸ் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பார்படாசில் 57 கிராம் அளவு கஞ்சா வைத்திருப்பது குற்றமல்ல. அதை பொதுவெளியில் கொண்டு செல்ல தடை உள்ளது. பார்படாஸ், கிராண்ட்லி ஆடம்ஸ் சர்வதேச விமான நிலையத்தில், கிர்டன் கைது செய்யப்பட்டார். இவர், 9 கிலோ கஞ்சா எடுத்துச் சென்றுள்ளார். இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 160 மடங்கு அதிகம். விசாரணைக்காக போலீசார் 'கஸ்டடி' எடுத்துள்ளனர்.
கனடா கிரிக்கெட் அணி வெளியிட்ட செய்தியில்,' சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வட அமெரிக்க தொடரில் பங்கேற்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம்,'' என தெரிவித்துள்ளது.

Advertisement