அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய தீ: குழந்தைகளை மீட்க போராடிய தாயின் துணிச்சல்

ஆமதாபாத்: குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தின் போது தமது குழந்தைளை மீட்க தாய் நடத்திய போராட்டம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஆமதாபாத்தில் கோக்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது குடியிருப்புகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
அதேநேரம், குடியிருப்பின் பால்கனியில் நின்றிருந்த பெண் ஒருவர், தமது 2 குழந்தைகளை காப்பாற்ற பெரும் போராட்டம் நடத்தி உள்ளார். கீழ்தளத்தில் இருந்தவர்களிடம் உதவி கோர, அங்கேயிருந்த 2 பேர் இதை கண்டனர்.
ஒவ்வொரு குழந்தையாக அவர் பால்கனியில் இருந்தபடியே தொங்கவிட, கீழே இருந்தவர்கள் கைப்பிடிச்சுவரில் துணிச்சலாக ஏறி குழந்தையை வாங்கிக் கொண்டனர். 2 குழந்தைகளையும் சற்றும் தாமதிக்காமல் அந்த தாய் காப்பாற்றி இருக்கிறார்.
குழந்தைகளை காப்பாற்றிய அவர், அடுத்த நொடியே அதே பால்கனியில் தொற்றியபடி உயிர்தப்பி உள்ளார். இந்த சம்பவத்தை அங்குள்ள சிலர் தமது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு உள்ளனர். இதை பார்த்த பலரும், தாயையும், அவர்களின் குழந்தைகளை காப்பாற்றிய உதவியவர்களையும் பாராட்டி இருக்கின்றனர்.
தகவலறிந்த தீயணைப்புத்துறை அங்கு சென்று துரித மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். மொத்தம் 18 பேரை அவர்கள் தீ விபத்தில் இருந்து காப்பாற்றி உள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழந்திருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.


