வக்ப் சட்டத்தை எதிர்த்து மே.வங்கத்தில் போராட்டம்: எம்.பி. அலுவலகம் சூறை. ரயில்கள் மீது கல்வீச்சு

7

கோல்கட்டா; மேற்கு வங்கத்தில் வக்ப் சட்டத்தை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டம் வன்முறையாக மாறி இருக்கிறது. திரிணாமுல் எம்.பி.,யின் அலுவலகம் சூறையாடப்பட்டு உள்ளது.



பார்லி. இரு அவைகளிலும் வக்ப் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அவரும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட வக்ப் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பும் மத்திய அரசின் அரசிதழில் வெளியாகிவிட்டது.


இந் நிலையில், இந்த சட்டத்தை ஏற்க மறுத்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. முர்ஷிதாபாதில் திரண்ட ஏராளமானோர் திடீரென வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினர். போலீசாருடன் மோதிய இந்த கும்பல், அங்குள்ள வாகனங்களை தீயிட்டு கொளுத்தியது.


பின்னர் நிம்ரிட்டா ரயில் நிலையத்தில் நுழைந்த இந்த கும்பல் அங்கிருந்த பொருட்களை சூறையாடியது. நிறுத்தப்பட்டு இருந்த ரயில்கள் மீது கற்களை வீசி சேதப்படுத்தியது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.


இதையடுத்து, 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 5 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் பயணிகள் சிலருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது.


ஜாங்கிபூர் பகுதியில் போராட்த்தில் குதித்தவர்கள், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., காலிலுர் ரஹ்மான் அலுவலகத்தை சூறையாடியது. மேலும் அதே பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்களை சேதப்படுத்தியது.


நிலைமை தொடர்ந்து பதற்றத்தில் இருப்பதால் போராட்டம் நடைபெற்ற பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement