ஓட்டுக்கூரை பிரச்னைக்கு தீர்வு தரும் 'யு.பி.வி.சி., ரூபிங்'

எங்கள் வீடு கட்டி, 22 ஆண்டுகள் ஆகிறது. அப்போது மொசைக் போட்டதை தற்போது டைல்ஸ் ஆக மாற்ற வேண்டும். மொசைக்கை தோண்டி எடுக்க வேண்டுமா அல்லது மொசைக்கின் மேல் டைல்ஸ் ஒட்ட வழி இருக்கிறதா?

-சந்திரன், மதுக்கரை மார்க்கெட்.

உங்கள் வீட்டில் மொசைக் வலிமையானதாக இருந்தால், அதன் மேல் டைல்ஸ் ஒட்டக்கூடிய 'டைல் பேஸ்ட்' மார்க்கெட்டில் உள்ளது. மொசைக்கை உடைக்காமல், அதன்மீது டைல் பேஸ்ட் கொண்டு உங்கள் தளத்தை மாற்றிக் கொள்ளலாம்.

நான் புதிதாக வீடு ஒன்றை, பில்டர் மூலம் கட்டியுள்ளேன். நிலம் உட்பட அனைத்தும் மொத்தமாக அவர்களிடத்திலேயே கடன் வாங்கினேன். ஆனால், வீட்டு கட்டுமான தரம் குறைவாக இருப்பது போல் உணர்கிறேன். வீடு கட்டி ஒரு வருடம்கூட ஆகவில்லை. சுவர் பூச்சு மற்றும் தளம் தரமற்றதாக இருப்பது போல் தோன்றுகிறது. வீட்டை முழுவதுமாக தரப் பரிசோதனை செய்யலாமா? வீடு தரமற்றதாக கட்டப்பட்டிருந்தால், கட்டுமான நிறுவனத்திடம் இழப்பீடு பெற முடியுமா?

-சண்முகசுந்தரம், திருப்பூர்.

நீங்கள் கட்டிய புது வீடு, ஒரு வருடத்தில் சுவர் பூச்சுகள் தரம் இல்லாமல் இருப்பதால், தகுந்த தர நிர்ணய நிறுவனங்கள் கோவையில் உள்ளன. அவர்களிடம் உங்களது கட்டடத்தின் வலிமை, தரத்தை நீங்கள் தர நிர்ணயம் செய்து கொள்ளலாம். தரப்பரிசோதனை முடிவில் தரமற்ற கட்டுமானம் என்றால் உங்கள் கட்டுமான நிறுவனத்திடம் அணுகி, அதற்குண்டான இழப்பீட்டை நீங்கள் பெற முடியும்.

நாங்கள் திருப்பூர் பகுதியில் வீடு கட்டி வருகிறோம். தற்போது கட்டட சுவர் பூசுவதற்கு தயாராக உள்ளது. எங்கள் பகுதி வெப்ப பகுதியாக உள்ளதால், மாற்றுப் பொருட்களைக் கொண்டு சுவர் பூசலாமா; ஆலோசனை கூறவும்.

-மெய்யப்பன், திருப்பூர்

தற்போது சுவர் பூச்சுக்கு, சந்தைகளில் பல்வேறு பொருள்கள் உள்ளன. சுவரின் உட்புற பூச்சுக்கு சிறந்த நிறுவனத்தின் ஜிப்சம் பிளாஸ்டர்கள் கிடைக்கின்றன. சரியான ஆலோசனைப்படி பூசினால், சுமார் 3-5 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைந்து, மிதமான சூழ்நிலை கட்டடத்தின் உள் பகுதியில் இருக்கும். இதனால், காலம் மற்றும் விரயச்செலவுகள் குறையும்.

எங்கள் வீட்டின் சுவர்களை, இன்டர்லாக் பிளாக்குளைக் கொண்டு கட்ட உள்ளோம்; ஆலோசனை கூறவும்.

-விநாயகம், பல்லடம்.

தற்போது அதிக பட்ஜெட் வீடுகளில், சிறந்த தரமான இன்டர்லாக் பிளாக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்டர்லாக் பிளாக் கொண்டு கட்டும்போது, கட்டடத்தின் வடிவமைப்பு பிரேம்டு ஸ்ட்ரக்சராக கண்டிப்பாக இருக்க வேண்டும். நில அதிர்வு ஏற்படும் போது, அதன் முழு எடையையும் பிரேம்டு ஸ்ட்ரக்சர் தாங்கிக் கொள்ளும். துாண்களுக்கு இடையில் இருக்கும், இன்டர்லாக் பிளாக்குகள் ஒரு அடைபொருளாக மட்டுமே இருக்கும்.

எங்கள் வீட்டின் பின்பகுதியில் சுமார், 500 சதுர அடிக்கு ஓடு கூரையுடன் ஒரு பகுதி உள்ளது. அதனை, ரூ.5,000க்கு வாடகைக்கு விட்டுள்ளோம். அதில், ஓட்டுக் கூரை சில இடங்களில் ஒழுகுகிறது, ரீப்பர்களில் கரையான் பிடித்துள்ளது. ஒரு பகுதி ஓடுகளை கழற்றி, ரீப்பர்களை மாற்றி, தோணியையும் மாற்றிய பிறகும் பிரச்னை தீரவில்லை.

-நாகேஸ்வரன், கோவை.

உங்கள் வீட்டின் மேற்கூரையை, மிகக் குறைந்த செலவில் 'கல்வனைஸ்டு ரூபிங்' அல்லது யு.பி.வி.சி., ரூபிங் செய்து கொள்வது, நிரந்தர தீர்வாக இருக்கும். மழைக்காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க, உங்கள் வீட்டின் பின்பகுதியை சற்று உயர்த்திக் கொண்டால் மழைநீர் தேங்காமல் இருக்கும்.

விஜயகுமார்

தலைவர்,

கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம் (காட்சியா).

Advertisement