லக்னோ அணி கலக்கல் வெற்றி: கடைசி ஓவரில் மும்பை ஏமாற்றம்

லக்னோ: கடைசி ஓவரில் மும்பை அணி ஏமாற்ற, லக்னோ அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உ.பி.,யின் லக்னோவில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் லக்னோ, மும்பை அணிகள் மோதின.
ரோகித் காயம்: வலைப்பயிற்சியின் போது முழங்காலில் காயமடைந்த மும்பை அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா, இப்போட்டியில் பங்கேற்கவில்லை. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'பவுலிங்' தேர்வு செய்தார்.
லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ், மார்க்ரம் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அஷ்வனி குமார் பந்தில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த மார்ஷ், 27 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்த போது விக்னேஷ் 'சுழலில்' மார்ஷ் (60) சிக்கினார். பாண்ட்யா 'வேகத்தில்' நிக்கோலஸ் பூரன் (12), கேப்டன் ரிஷாப் பன்ட் (2) வெளியேறினர்.
மார்க்ரம் நம்பிக்கை: சான்ட்னர் வீசிய 14வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டிய ஆயுஷ் படோனி (30) ஓரளவு கைகொடுத்தார். 34 பந்தில் அரைசதம் எட்டிய மார்க்ரம் (54) நம்பிக்கை தந்தார். டேவிட் மில்லர் (27) ஆறுதல் தந்தார். ஆகாஷ்தீப் சிங்கை (0) வெளியேற்றிய பாண்ட்யா, பிரிமியர் லீக் அரங்கில் முதன்முறையாக 5 விக்கெட் சாய்த்தார். லக்னோ அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 203 ரன் எடுத்தது. ஷர்துல் தாகூர் (5), அவேஷ் கான் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
சூப்பர் சூர்யா: சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு வில் ஜாக்ஸ் (5), ரிக்கிள்டன் (10) ஏமாற்றினர். அடுத்து வந்த நமன் திர், ஆகாஷ்தீப் வீசிய 4வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்த போது திக்வேஷ் 'சுழலில்' நமன் திர் (46) சிக்கினார். அவேஷ் கான் வீசிய 11வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த சூர்யகுமார், பிஷ்னோய் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அரைசதம் எட்டினார். அவேஷ் கான் 'வேகத்தில்' சூர்யகுமார் (67) அவுட்டானார். திலக் வர்மா (25) 'ரிட்டயர்ட் அவுட்' ஆனார்.
கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 22 ரன் தேவைப்பட்டது. அவேஷ் கான் பந்துவீசினார். முதல் பந்தை கேப்டன் பாண்ட்யா சிக்சருக்கு அனுப்பினார். அடுத்த 5 பந்தில், 3 ரன் மட்டுமே கிடைத்தது. மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்து தோல்வியடைந்தது. பாண்ட்யா (28), சான்ட்னர் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
மும்பை அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய 8வது வீரரானார் சூர்யகுமார் யாதவ். ஏற்கனவே ரோகித் (215 போட்டி), போலார்டு (189), ஹர்பஜன் (136), பும்ரா (133), மலிங்கா (122), ராயுடு (114), ஹர்திக் பாண்ட்யா (109) இம்மைல்கல்லை எட்டினர்.
பாண்ட்யா 5 விக்.,
மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சை (5/36, 4 ஓவர்) நேற்று பதிவு செய்தார். இதற்கு முன், 2023ல் ஆமதாபாத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 4/16 (4 ஓவர்) விக்கெட் சாய்த்திருந்தார். தவிர பிரிமியர் லீக் அரங்கில் ஒரு போட்டியில், 5 விக்கெட் சாய்த்த முதல் கேப்டன் ஆனார் பாண்ட்யா.

மேலும்
-
470 ஏக்கரில் 3 லட்சம் மரங்கள்; உலகின் மிகப்பெரிய மியாவாக்கி காடு; குஜராத்தில் ஒரு ஆச்சர்ய சாதனை!
-
லக்னோ அணி பவுலிங்; குஜராத் அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு
-
கடத்தல் வாகனத்தை விடுவிக்க ரூ.30,000 லஞ்சம்; கடையம் பெண் இன்ஸ்பெக்டர் கைது
-
அரை மனதோடு அமைக்கப்பட்ட கூட்டணி: திருமாவளவன் பேட்டி
-
யு.பி.ஐ., சேவை பாதிப்பு: கூகுள்பே, போன்பேயில் பணபரிமாற்ற சிக்கல்: பயனர்கள் அவதி
-
இனி சிக்ஸர் அடிக்குறது தான் வேலை; சொல்கிறார் அண்ணாமலை