‛ நீட்' விலக்கு தமிழக மசோதா நிராகரிப்பு : ஒப்புதல் தர ஜனாதிபதி மறுப்பு

2

சென்னை, ஏப். 5- ''நீட் தேர்வு விலக்கு கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தாலும், நம் போராட்டம் முடிந்து விடவில்லை. அடுத்த நடவடிக்கைகள் குறித்து, சட்ட வல்லுனர்களிடம் கலந்தாலோசிக்கப்படும். இது தொடர்பாக, அனைத்து சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம், வரும் 9ம் தேதி நடத்தப்படும்,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.



சட்டசபையில் நேற்று அவர் பேசியதாவது:


மருத்துவப் படிப்புக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு அறிமுகமான பின், அந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர முடியாத கிராமப்புற மாணவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பு எட்டாக் கனியாகி விட்டது.

உயர்நிலை குழு



கிராமப்புற பகுதிகளிலும், பின்தங்கிய பகுதிகளிலும் வழங்கப்படும் மருத்துவச் சேவைகளை, எதிர்காலத்தில் இந்த தேர்வு பாதிக்கும்.

எனவே, மாற்று மருத்துவ மாணவர் சேர்க்கை முறை குறித்து பரிந்துரைப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில், ஒரு உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில், 2021 செப்டம்பர் 3ம் தேதி, தமிழ்நாடு மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் 2021 என்ற சட்ட முன்வடிவு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின், கவர்னரால் ஒப்புதல் வழங்கப்படாமல், திருப்பி அனுப்பப்பட்டது. கடந்த 2022 பிப்., 5ல் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, மீண்டும் அந்த சட்ட முன்வடிவு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

கருப்பு அத்தியாயம்



பின், கவர்னர் வழியாக ஜனாதிபதி ஒப்புதலுக்காக, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை, ஆயுஷ் துறை, உள்துறை, உயர் கல்வித்துறை என, பல்வேறு அமைச்சகங்கள் கேட்ட அனைத்து விளக்கங்களுக்கும், தமிழக அரசு உடனுக்குடன் பதில் அளித்தது.

அவற்றை ஏற்காமல், நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதலை மத்திய அரசு மறுத்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மாநில சட்டசபையின் மாண்பை அவமதித்துள்ள மத்திய அரசின் எதேச்சாதிகார போக்கு, அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள கூட்டாட்சி கருத்தியல் வரலாற்றில், ஒரு கருப்பு அத்தியாயம்.

தமிழக மக்களின் எண்ணங்களையும், சட்டசபை தீர்மானங்களையும், மத்திய அரசு கருத்தில் கொள்ளவே இல்லை. இதை, மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கின்றனர்.

மத்திய அரசு நம் கோரிக்கையை நிராகரித்து இருக்கலாம். ஆனால், நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நம் போராட்டம், எந்த வகையிலும் முடிந்து விடவில்லை.

நடவடிக்கை



இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தில், நாம் எடுக்க வேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து, சட்ட வல்லுனர்களிடம் கலந்தாலோசிக்கப்படும்.

இது தொடர்பாக, அனைத்து சட்டசபை கட்சித் தலைவர்களிடம், ஒரு கலந்தாலோசனை கூட்டம், வரும் 9ம் தேதி மாலை, தலைமை செயலகத்தில் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் மருத்துவக் கல்வி கனவோடு படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர் சார்பாக, அவர்களின் கனவை நனவாக்க, தமிழக அரசு உறுதியோடு சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement