பகிங்ஹாமில் படகு போக்குவரத்து திட்டம் துார் வாரும் பணி துவங்காததால் அதிருப்தி

மாமல்லபுரம்:சோழிங்கநல்லுார் -- கடப்பாக்கம் இடையே, பகிங்ஹாம் கால்வாய் நீர்வழி படகு போக்குவரத்திற்காக, கால்வாயை துார் வாரி மேம்படுத்த, பல ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டும், பணிகள் கிடப்பில் உள்ளன. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட போது, இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தில், பகிங்ஹாம் கால்வாய் நீர்வழி முக்கியமாக இருந்தது.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா பகுதியில் துவங்கும் பகிங்ஹாம் கால்வாய், தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கூனிமேடு பகுதி வரை நீண்டுள்ளது.
உப்பு, விறகு உள்ளிட்ட பொருட்களை, அக்காலத்தில் ஓரிடத்தில் இருந்து வேறிடத்திற்கு படகில் கொண்டு செல்வதற்கு, பகிங்ஹாம் கால்வாய் உருவாக்கப்பட்டது.
வங்கக் கடலுக்கு இணையாக, கடற்கரையிலிருந்து, 2 கி.மீ., மேற்கில், பகிங்ஹாம் கால்வாய் அமைந்துள்ளது. கடலோர இடங்களில் கடலிலிருந்து, கால்வாய்க்கு நீர்வரத்து முகத்துவாரங்கள் உள்ளன.
அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களிலும், கடல் சீற்றத்தின் போதும், கால்வாயில் கடல்நீர் புகுந்து பெருக்கெடுக்கும். மழைநீரும் கால்வாயில் தேங்கும்.
பல ஆண்டுகளுக்கு, பகிங்ஹாம் கால்வாயில் படகு போக்குவரத்து நீடித்தது. சாலை போக்குவரத்து துவங்கி, மோட்டார் வாகனங்கள் இயங்கத் துவங்கியதும், நாளடைவில் இந்த நீர்வழி போக்குவரத்து முற்றிலும் வழக்கொழிந்தது.
பகிங்ஹாம் கால்வாயும் துார்ந்து சீரழிந்தது. பல பகுதிகளில், கால்வாயின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு, இந்திய உள்நாட்டு நீர்வழித்தட ஆணையம் சார்பில், கால்வாயை துார் வாரி, உள்நாட்டு நீர்வழியாக மேம்படுத்தி பயன்படுத்த முடிவெடுத்தது.
இதையடுத்து, சென்னை -- முட்டுக்காடு இடையே, பகிங்ஹாம் கால்வாயை துார் வாரி ஆழப்படுத்தியது. ஆனாலும் பயனில்லாமல் போனது.
இச்சூழலில் மீன், பிற கடல் உணவுப் பொருட்கள், உப்பு, உரம், மரம் என, 300 டன் கொள்ளளவு பொருட்களை, பகிங்ஹாமில் படகில் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது.
அதற்கேற்ப, சென்னை திருவான்மியூர் -- கல்பாக்கம் வரை, 55 கி.மீ., துாரத்திற்கு, 125 கோடி ரூபாய் மதிப்பில் துார் வாரி ஆழப்படுத்த, 2014ல் முடிவெடுக்கப்பட்டது.
அதே ஆண்டு கல்பாக்கம், -மரக்காணம் அடுத்த கூனிமேடு இடையே, 75 கி.மீ., துாரத்திற்கு துார் வார கருதி, செயற்கைக்கோள் சாதனம் வாயிலாக கால்வாயின் நீர்மட்டம், துார்ந்துள்ள அளவு, மேடு, பள்ளம், தட்ப வெப்பம், ஓரிடத்திற்கும் மற்றொரு இடத்திற்கும் உள்ள ஆழம் வித்தியாசம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.
கால்வாய் நீர்வழித் தடத்தில், பயணியர் மற்றும் சரக்கு படகு போக்குவரத்திற்காக, தேவையுள்ள இடங்களில் படகு துறை, பொருட்கள் எடை நிறுத்துமிடம், துணை மின் நிலையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
பின்னர், சோழிங்கநல்லுார் -- கடப்பாக்கம் இடையே, 80 கி.மீ., துாரத்திற்கு துார் வாரி மேம்படுத்த, 2016ல் இந்திய உள்நாட்டு நீர்வழித்தட ஆணையம் முடிவெடுத்தது.
ஆனால் பகிங்ஹாம் கால்வாய், தமிழக பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதை மேம்படுத்த, இந்திய உள்நாட்டு நீர்வழித்தட ஆணையம், தமிழக அரசின் ஒப்புதல் பெற வேண்டும்.
ஆனால் ஒப்புதல் பெறாமல், எட்டு ஆண்டுகள் கடந்தும், தற்போது வரை மேம்படுத்தப்படாமல், இத்திட்டம் கிடப்பில் உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால், சென்னை - மாமல்லபுரம் இடையே, கால்வாயில் சுற்றுலா போக்குவரத்திற்கும் வாய்ப்புள்ளது.
பகிங்ஹாம் கால்வாய் குறுக்கிடும் சாலைகளில், தற்போது புதிதாக அமைக்கப்படும் பாலங்கள், படகு போக்குவரத்து கருதி, உயரமாக அமைக்கப்படுகின்றன.
மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், பரமன்கேணி உள்ளிட்ட பகுதிகளில், இதுபோன்று மேம்பாலங்கள் உயரமாக கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, பழங்கால நினைவாக மட்டுமே உள்ள பகிங்ஹாம் கால்வாய் மேம்பாடு திட்டத்தை, விரைந்து செயல்படுத்தி, நிகழ்கால பயன்பாட்டிற்கும் கொண்டுவர வேண்டுமென, பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
கால்வாய் மேம்பாடால் பயன்கள்:கடலோர பகுதி பயணியர், சரக்கு ஆகிய போக்குவரத்து, கால்வாய் நீர்வழித்தடத்திற்கு மாறும்போது, சாலை விபத்து குறையும். சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படும்சுனாமி, கனமழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், இக்கால்வாய் நீரை உள்வாங்கி, சேதம் தவிர்க்கப்படும்
மேலும்
-
கரடியின் நகங்களை பிடுங்கி சித்ரவதை: சத்தீஸ்கரில் பரபரப்பு
-
முதல்வர் ஸ்டாலின் இன்னும் எத்தனை நாட்கள் தமிழக மக்களை ஏமாற்ற முடியும்? இபிஎஸ் கேள்வி
-
சென்னை அணி தோற்றது ஏன்: மைக்கேல் கிளார்க் விளக்கம்
-
மும்பையில் டேபிள் டென்னிஸ் ஏலம்
-
லக்னோ அணி கலக்கல் வெற்றி * குஜராத் அணிக்கு முதல் தோல்வி
-
பில்லியர்ட்ஸ்: அத்வானி 'வெள்ளி'