சென்னை அணி தோற்றது ஏன்: மைக்கேல் கிளார்க் விளக்கம்

1

சென்னை: ''சென்னை அணி வீரர்கள் நம்பிக்கையின்றி விளையாடுவதால் வெற்றி பெற முடியவில்லை,'' என, மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை அணி (103/9), 8 விக்கெட் வித்தியாசத்தில் 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணியிடம் (107/2) வீழ்ந்தது. இதுவரை விளையாடிய 6 போட்டியில், தொடர்ச்சியாக 5ல் தோற்ற சென்னை அணி, சேப்பாக்கம் மைதானத்தில் முதன்முறையாக 'ஹாட்ரிக்' தோல்வியை பதிவு செய்தது.

இதுகுறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியது: சேப்பாக்கம் ஆடுகளம் 'பேட்' செய்வதற்கு சற்று கடினமாக தெரிந்தது. புதிய பந்தில் 'பவுலிங்' செய்ய நன்றாக இருந்தது. ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது. சென்னை அணியினரின் திட்டம் தவறாகிவிட்டது என்று நினைக்கிறேன். அவர்கள் நம்பிக்கையின்றி விளையாடியது போல இருந்தது. வெற்றி பெற எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. மோசமான தோல்வியை தவிர்க்க விளையாடியது போன்று இருந்தது.

சென்னை அணியினர் போட்டியில் பழமையான அணுகுமுறையை கையாள்கின்றனர். 'டி-20' போட்டிக்கு ஏற்ப விளையாடியதாக தெரியவில்லை. இதில் மாற்றம் செய்ய வேண்டும். கொஞ்சம் 'ரிஸ்க்' எடுத்து விளையாடினால் வெற்றிப்பாதைக்கு திரும்பலாம்.

இவ்வாறு கிளார்க் கூறினார்.




பியுஸ் சாவ்லா 'அட்வைஸ்'


இந்திய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பியுஸ் சாவ்லா கூறுகையில், ''சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப, அணியில் மாற்றம் செய்ய வேண்டும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். திரிபாதி, தீபக் ஹூடாவுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டது. அடுத்து வரும் போட்டிகளில் ஆன்ட்ரி சித்தார்த் போன்ற திறமையான இளம் வீரர்களை களமிறக்க வேண்டும்,'' என்றார்.



'பிளே-ஆப்' செல்லுமா
சென்னை அணி இதுவரை 6 போட்டியில், 5ல் தோற்று 2 புள்ளியுடன் உள்ளது. மீதமுள்ள 8 போட்டியில், 7ல் வெற்றி பெற்றால், 16 புள்ளிகளுடன் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறலாம். 6ல் வென்றால் (14 புள்ளி) மற்ற போட்டிகளின் முடிவை பொறுத்து 'பிளே-ஆப்' வாய்ப்பு முடிவாகும். இரண்டு போட்டிக்கு மேல் தோற்றால், 'பிளே-ஆப்' வாய்ப்பு பறிபோகலாம்.

Advertisement