லக்னோ அணி கலக்கல் வெற்றி * குஜராத் அணி தோல்வி

லக்னோ: பிரிமியர் தொடரில் இரண்டாவது தோல்வியடைந்தது குஜராத். லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
லக்னோவில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ரிஷாப் பன்ட்டின் லக்னோ அணி, சுப்மல் கில் தலைமையிலான குஜராத்தை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற ரிஷாப், பீல்டிங் தேர்வு செய்தார்.
சூப்பர் துவக்கம்
குஜராத் அணிக்கு சுப்மன் கில், தமிழகத்தின் சாய் சுதர்சன் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. சுப்மன் கில் 31 பந்தில் அரைசதம் எட்டினார். இந்த ஜோடியின் வேகமான ரன் குவிப்பு கைகொடுக்க, குஜராத் அணி 10 ஓவரில் 103/0 ரன் குவித்தது. மறுபக்கம் சாய் சுதர்சன் தன் பங்கிற்கு அரைசதம் (32 பந்து) அடித்தார். இத்தொடரில் இவர் அடித்த நான்காவது அரைசதம் இது. முதல் விக்கெட்டுக்கு 12 ஓவரில் 120 ரன் சேர்த்த போது, சுப்மன் கில் (60) அவேஷ் கான் பந்தில் அவுட்டானார்.
சரிந்த பேட்டிங்
இதன் பின் குஜராத் பேட்டிங்கில் சரிவு ஏற்பட்டது. பிஷ்னோய் வீசிய 14 வது ஓவரின் முதல் பந்தில் சாய் சுதர்சன் (56) வெளியேறினார். கடைசி பந்தில் வாஷிங்டன் சுந்தர் (2) அவுட்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்லரை (16) திக்வேஷ் ரதி திருப்பி அனுப்பினார். ரூதர்போர்டு 22 ரன் மட்டும் எடுத்தார்.
கடைசி 48 பந்தில் 60 ரன் மட்டும் எடுத்தது குஜராத். 20 ஓவரில் குஜராத் அணி 180/6 ரன் எடுத்தது. ஷாருக்கான் (11), ரஷித் கான் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரிஷாப் ஏமாற்றம்
லக்னோ அணிக்கு இம்முறை மார்க்ரமுடன் இணைந்து, கேப்டன் ரிஷாப் பன்ட் துவக்கம் தந்தார். சிராஜ் வீசிய 3வது ஓவரில் மார்க்ரம் 2, ரிஷாப் ஒரு பவுண்டரி அடித்தனர். பிரசித் கிருஷ்ணா பந்துகளில் 6, 4 என மார்க்ரம் அடிக்க, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 6.2 ஓவரில் 65 ரன் சேர்த்த போது, ரிஷாப் (21) அவுட்டானார்.
பூரன் அசத்தல்
பின் வந்த நிக்கோலஸ் பூரன், 7 ரன் எடுத்த போது, ரஷித் கான் பந்தை அடித்தார். இந்த 'கேட்ச்' வாய்ப்பை ரஷித் கோட்டை விட்டார். வாய்ப்பை பயன்படுத்திய பூரன், சிக்சர் மழை பொழிந்தார். வாஷிங்டன் சுந்தர் பந்தை சிக்சருக்கு விரட்டினார். சாய் கிஷோர் வீசிய 10 வது ஓவரில், 6, 4, 6, 6 என விளாச, மொத்தம் 24 ரன் எடுக்கப்பட்டன.
மறுபக்கம் மார்க்ரம் அரைசதம் எட்டினார். இவர், 31 பந்தில் 58 ரன் எடுத்த போது பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டானார். மறுபக்கம் சிராஜ் ஓவரிலும் 6, 4 என அடித்த பூரன், 23 வது பந்தில் அரைசதம் எட்டினார். லக்னோ அணி 15 ஓவரில் 154/2 ரன் எடுத்து இலக்கை வேகமாக நெருங்கியது.
இந்நிலையில் ரஷித் சுழலில் சிக்கினார் பூரன் (61 ரன், 34 பந்து, 1x4, 7x6). மில்லரை (7), வாஷிங்டன் போல்டாக்கினார். சாய் கிஷோர் வீசிய கடைசி ஓவரில் 4, 6 என அடித்த ஆயுஷ் படோனி, வெற்றியை உறுதி செய்தார். லக்னோ அணி 19.3 ஓவரில் 186/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது.