யானையை கொன்று எரித்த வழக்கில் தப்பியவர் வனத்தில் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு வனத்துறையினர் கொன்றதாக புகார்

தர்மபுரி:யானையை கொன்ற வழக்கில் கைதாகி, தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டவர், நேற்று வனப்பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, ஏமனுார் வனப்பகுதியில் மார்ச் 1ல், ஆண்யானை கொன்று எரிக்கப்பட்ட நிலையில், தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து, வனத்துறை அளித்த அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், மார்ச் 17ல் தர்மபுரி மாவட்டம், ஏமனுார் அடுத்த கொங்கரப்பட்டியைச் சேர்ந்த செந்தில், 30, என்பவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், கூடுதல் தகவல்களை மறுநாள் வெளியிடுவதாகவும் தெரிவித்தனர்.

அதன்படி, மார்ச், 18 இரவு, கொங்கரப்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார், 23, கோவிந்தராஜ், 54, செங்கம்பாடியைச் சேர்ந்த தினேஷ், 26, ஆகிய மூவரை கைது செய்து, அவர்களிடம் இருந்து யானை தந்தம், துப்பாக்கி உட்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வனத்துறையினர் புகைப்படங்களை வெளியிட்டனர்.

மேலும், மூவர் தலைமறைவாக இருப்பதாக தெரிவித்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட செந்திலுக்கு, கைவிலங்கு அணிவித்து, ஏமனுார் வனப்பகுதியில் யானையை கொன்ற இடத்திற்கு கடந்த, 18ல் விசாரணைக்காக வனத்துறையினர் அழைத்துச் சென்றனர்.

அப்போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இதற்கிடையே, 'விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் குறித்து எந்தவித தகவலும் தெரியவில்லை.

'வனத்துறையினர் என் கணவர் செந்திலை கொன்றிருக்கலாம்; அவரை கண்டுபிடித்துத் தர வேண்டும்' என, செந்தில் மனைவி சித்ரா, மார்ச் 19ல், தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

தொடர்ந்து, தப்பிச்சென்ற செந்தில் குறித்து, ஏரியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டதாக, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று ஏமனுார் அடுத்த கொங்கரப்பட்டி அருகே உள்ள வனப்பகுதியில், ஆண் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, வனத்துறையினர் சென்றனர்.

அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை அடையாளம் காட்ட, சித்ரா மற்றும் உறவினர்களை அழைத்துச் சென்றனர்.

இதில், அழுகிய நிலையில் சடலமாக இருந்தது செந்தில் தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். செந்தில் தப்பிச் சென்றதாகக் கூறிவிட்டு, அவரை வனத்துறையினர் கொன்று விட்டதாக சித்ரா கூறினார்.


தற்கொலை செய்திருக்கலாம்




கைவிலங்குடன் தப்பிய செந்தில் குறித்து, ஏரியூர் போலீசில் புகார் அளித்திருந்தோம். சடலம் முழுதும் அழுகி இருந்ததால், டி.என்.ஏ., பரிசோதனை எடுப்பது குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.- ராஜாங்கம், மாவட்ட வன அலுவலர்



காணாமல் போன கைவிலங்கு




செந்தில் சடலம் மீது நாட்டுத் துப்பாக்கி ஒன்று இருந்தது. ஆனால், தப்பிச் சென்றபோது அவர் கையில் இருந்த கைவிலங்கு இல்லை. ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விஜயகுமாரின் தந்தை மார்ச், 26ல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து, செந்திலின் மர்ம மரணம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement