கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா இரு மாநில அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம்

கூடலுார்:தமிழக கேரள எல்லையான விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் மே 12 நடக்கும் சித்ரா பவுர்ணமி விழா ஏற்பாடுகள் குறித்து தேனி, இடுக்கி கலெக்டர்கள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் தேக்கடியில் நடந்தது.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். இதில் தமிழக, கேரள பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இக்கோயில் அமைந்துள்ள பகுதி யாருக்குச்சொந்தம் என்பதில் இரு மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.

இருந்த போதிலும் கோயிலுக்கு செல்லும் ஜீப் பாதை கேரள வனப்பகுதியில் இருப்பதால் விழா கொண்டாடுவதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதில் எடுக்கப்படும் முடிவுகளின்படி விழா கொண்டாடப்படும்.

இந்தாண்டு மே 12 நடக்கும் சித்ரா பவுர்ணமி விழா தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தேனி கலெக்டர் ரஞ்சித் சிங், இடுக்கி கலெக்டர் விக்னேஷ்வரி தலைமையில் நேற்று தேக்கடியில் நடந்தது.

இரு மாநில வனம், போலீஸ், வருவாய், சுகாதாரம், போக்குவரத்து, தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழா அன்று காலை 6:00 முதல் மதியம் 2:30 மணி வரை குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்ல பக்தர்களை அனுமதிப்பது, மாலை 5:00 மணிக்கு கோயிலில் இருந்து திரும்புவது, கடுமையான வெப்பம் நிலவுவதால் கூடுதலாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவது, கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்குவது, குமுளியிலிருந்து கோயில் வரை செல்லும் 14 கி.மீ., தூர ஜீப் பாதையை சீரமைப்பது, லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து கோயில் வரையுள்ள 6.6 கி.மீ., தூர மலைப்பாதையை சீரமைத்து குடிநீர் வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன. மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை செயலாளர் ராஜ கணேசன், பொருளாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement