கிடப்பில் சிவகாசி வேதிப்பொருள் ஆராய்ச்சி மைய கட்டுமானப்பணி பட்டாசு உற்பத்தியாளர்கள் அதிருப்தி

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ரூ.15 கோடியில் துவங்கப்பட்ட நாட்டின் 2வது வேதிப்பொருள் ஆராய்ச்சி மைய கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பட்டாசு உற்பத்தியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இம்மாவட்டம் சிவகாசி, விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை பகுதியில் 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. 2018ல் பட்டாசு தொடர்பான வழக்கில் பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது, சரவெடி தயாரிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (நீரி), மத்திய பெட்ரோலியம், வெடிபொருள் பாதுகாப்பு அலுவலகம் (பெசோ) ஆகிய அமைப்புகளால் குறைந்த அளவில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பசுமை பட்டாசுகள் தயாரிப்பதற்கான விதிகள் உருவாக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மட்டுமே வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் உள்ளதால் சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் வேதிப்பொருள் மாதிரியை நாக்பூர் ஆய்வகத்திற்கு அனுப்பி பசுமை பட்டாசு உரிமம் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனால் சிவகாசியில் உள்ள தனியார் கல்லுாரியில் தற்காலிகமாக ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. மேலும் 2022ல் மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகம், நீரி மற்றும் பட்டாசு உரிமையாளர்கள் இடையே பசுமை பட்டாசுகள் தயாரிப்பு குறித்த ஆய்வு மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அதன்படி இந்த ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு ரூ.9 கோடி, தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம்
( டான்பாமா ) சார்பில் ரூ. 6 கோடி என ரூ.15 கோடியில் வேதிப் பொருள் ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவானது. சிவகாசி அருகே ஆணைக்குட்டத்தில் 5 ஏக்கரில் நாட்டின் 2வது வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் அமைக்க 2023 ஜன., 10 அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் மூலப்பொருட்கள், ரசாயன கலவை, பட்டாசு வெளியிடும் புகை ஆராய்ச்சி, பட்டாசு ஆலையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்குதல், பசுமை பட்டாசு உற்பத்திக்கான பயிற்சி அளித்தல் மற்றும் பட்டாசு தொழிலை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற நீரி அமைப்பின் தலைமை விஞ்ஞானி சாதனாராயிலு, ஆய்வு மையத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கொள்முதல் செய்யப்பட்டு விட்டதாகவும், 2023 ஏப்ரலில் ஆராய்ச்சி மையம் செயல்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆராய்ச்சி மையத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக நடந்த நிலையில் சில மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது அப்பகுதியில் புதர் மண்டியுள்ளது. சிவகாசியில் வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் செயல்பாட்டிற்கு வந்தால் பசுமை பட்டாசு உற்பத்தி மட்டுமின்றி வேதிப்பொருள் சார்ந்த பிற தொழில்கள் துவங்கலாம் என எதிர்பார்த்திருந்த பட்டாசு உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும்
-
பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை: 4000 போலீசார் பாதுகாப்பு
-
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் முழுமையாக குடிநீர் வினியோகம் செய்ய மக்கள் எதிர்பார்ப்பு
-
நகைக் கடன் பெற புதிய விதிகள்: ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு
-
சேத்துாரில் வெட்டப்படும் சாலையோர மரங்கள்
-
பாதுகாப்பு விழிப்புணர்வு
-
மாந்தோப்பு பேராலி ரோடு சேதம் வாகனங்கள் செல்ல சிரமம்